சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 ரன்வேக்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் முதல் ரன்வே 3.66 கிலோமீட்டர் நீளமும், இரண்டாவது ரன்வே 2.89 கிலோமீட்டர் நீளமும் உடையது. இதில் முதல் ரன்வேயான பிரதான ரன்வேயில், பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்பட்டு வருகின்றன. இரண்டாவது ரன்வேயில், ஏ டி ஆர் எனப்படும் 76 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள், மற்றும் தனியாரின் தனி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2 ரன்வேக்களையும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை இந்திய விமான நிலைய ஆணையம் எடுத்து வந்தது.
அதற்கு வசதியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள், ஒரு ரன்வேயில் இருந்து, மற்றொரு ரன்வேக்கு செல்ல, ‘‘டாக்ஸி வே” என்ற இணைப்புப் பாதைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த டாக்ஸி வே ‘‘பி” என்ற ‘‘பிராவோ”முதல் ரன்வேக்கு, நேராக செல்லாமல் வளைந்து செல்லும் வகையில் இருந்தது. இந்த டாக்ஸிவே பியை, நேர்படுத்தும் பணிகள் நிறைவடைந்து, ஒரே நேரத்தில் 2 ரன்வேக்களும் பயன்பாட்டில் உள்ளன. இதை தொடர்ந்து, 2வது ரன்வேயில், விமான சேவைகளின் எண்ணிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சென்னை விமான நிலைய, இரண்டாவது ரன்வேயில், 615 விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இரண்டாவது ரன்வேயில் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரித்து, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இரண்டாவது ரன்வேயில் 952 விமானங்களாக அதிகரித்துள்ளன. மேலும், சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ரன்வேயில், இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் வந்து தரையிறங்குவது, புறப்படுவது போன்றவைகளின் எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும். சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு மணி நேரத்தில், 30 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில், இயக்கப்பட்டு வரும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க இருப்பதோடு, விமானங்கள் புறப்பாடு, தரை இறங்குவதில் அதிகமாக தாமதங்கள் ஏற்படாமல், விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவது, தரை இறங்குவது போன்றவைகள் செயல்படுத்தப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மொத்த விமானங்கள் இயக்கம்:
மாதம் முதன்மை ஓடுபாதை 2வது ஓடுபாதை
ஏப்ரல் 11,470 615
மே 11684 680
ஜூன் 10,996 952
உள்நாட்டு விமானங்களின் இயக்கம்:
மாதம் முதன்மை ஓடுபாதை 2வது ஓடுபாதை
ஏப்ரல் 8317 551
மே 8394 627
ஜூன் 7785 900
சர்வதேச விமானங்களின் இயக்கம்:
மாதம் முதன்மை ஓடுபாதை 2வது ஓடுபாதை
ஏப்ரல் 2760 60
மே 2889 52
ஜூன் 2809 52
* சென்னை விமான நிலைய விமான போக்குவரத்தில் 2வது ஓடுபாதையில் இயக்கப்பட்ட 11,948 விமானங்களில் 8685 (72.68%) உள்நாட்டு விமானங்கள், 2861 (23.95%) சர்வதேச விமானங்கள், 402 (3.37%) சரக்கு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.