Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

79வது சுதந்திர தின கொண்டாட்டம் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்: பயணிகள் முன்னதாக வர அறிவுறுத்தல் திரவ பொருள், அல்வா, ஜாமுக்கு தடை

மீனம்பாக்கம், ஆக. 12: நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச விமான பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் காலணிகள், பெல்ட்டுகள், குளிருக்கு அணியும் ஜாக்கெட்டுகள் ஸ்கேன் மூலம் சோதனை செய்யப்படும். திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 79வது சுதந்திரதின விழா வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க, தீவிரவாதிகள் சதித்திட்டங்கள் மேற்கொள்ளலாம் என்று ஒன்றிய உள்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமானநிலையத்தில் நேற்று அதிகாலை முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு, சமீப காலமாக அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வருவதை அடுத்து, ஏற்கனவே பாதுகாப்பு சோதனைகள் அதிகரித்து, 3 அடுக்கு பாதுகாப்பு முறைகள் அமலில் இருந்தன. அந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை, சென்னை விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை முதல், சென்னை விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும், 20ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் வெளிவட்ட பகுதியில் சென்னை மாநகர போலீசாரும், உள்வட்ட பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தீவிர பாதுகாப்பு பணிகளில் உள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையிடுகின்றனர்.

அதேபோல் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் பரிசோதிக்கின்றனர். விமானநிலைய வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் ரோந்துவந்து கண்காணிக்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடிப்படை வீரர்கள் மோப்ப நாய்களுடன் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும், தீவிரமாக சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர். சென்னை விமானநிலையத்தில் பார்வையாளர்கள் வருவதற்கு தடை ஏற்கனேவே கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. எனவே அது தொடர்கிறது. அதோடு முக்கிய பிரமுகர்களை வரவேற்க, வழி அனுப்ப வருபவர்களுக்கு பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் எனப்படும் பிசிஏஎஸ் வழங்கும் சிறப்பு பாஸ்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். மேலும் விமான பயணிகளுக்கும், பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன், விமானத்தில் ஏறும் இடத்தில் பயணிகளுக்கு, ``ரேண்டம்” செக்கப் என்று, கூடுதலாக ஒரு பரிசோதனை நடத்தப்படுகிறது.

குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை துருவித்துருவி சோதிக்கின்றனர். பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பார்சல்கள் அனைத்தையும் பலகட்ட சோதனைக்குப் பின்பே, விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனர். விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையத்திற்கு வருவதற்கு பயணிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

அதோடு விமான நிலைய வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் சக்தி வாய்ந்த லேசர் லைட்டுகளை உபயோகப்படுத்துவதற்கும் மற்றும் காஸ் நிரப்பிய பலூன்களை பறக்க விடுவதற்கும், ஏற்கனவே சென்னை மாநகர காவல் ஆணையரகம் தடைவிதித்துள்ளது. அந்த தடையை 100 சதவீதம் முழுமையாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை விமானநிலையம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்புகளுடன் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அச்சப்பட வேண்டியது இல்லை. வழக்கம்போல் தங்கள் விமான பயணத்தை மேற்கொள்ளலாம். அதே நேரத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தும் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு, பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.