நாகப்பட்டினம்: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் பின்னால் வந்த லாரி ஏறி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகப்பட்டினம் ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(24), இவரது நண்பர் சென்னையை சேர்ந்த ஜீவா என்பவரின் மகன் கார்த்தி(33). இருவரும் ஒரே பைக்கில் நேற்று மாலை நாகூர் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் கீழ்வேளூர் அருகே கூத்தூரை சேர்ந்த வினோத் பாபு(27), மனைவி சிந்து பைரவி(23)யுடன் பைக்கில் நாகூரில் இருந்து கூத்தூர் சென்று கொண்டிருந்தார்.
நாகூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஆழியூர் பிரிவு இடத்தில் இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் 4 பேரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி சக்கரத்தில் சிக்கி கார்த்தி, வினோத்பாபு, ஆனந்தராஜ் ஆகியோர் பலியாகினர். சிந்துபைரவி படுகாயத்துடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.