Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை எனும் குழந்தையை தினந்தோறும் சீராட்டும் தாய்மார்கள் : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.10.2025) சென்னை, எழும்பூர், வேப்பேரி பெரியார் திடலில் மேயர் திருமதி.ஆர்.பிரியா அவர்களின் ஏற்பாட்டில் பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய 1,100 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி அவர்கள் பேசியதாவது :

“சென்னை என்ற குழந்தையை தினமும் வேலைக்கு அனுப்பி, விளையாட அனுப்பி, அது விட்டுக்கு வந்தவுடன் குளிக்க வைக்கின்ற தாய்மார்கள் இங்கு வந்திருக்க கூடிய தூய்மைப் பணியாளர்களாகிய நீங்கள்தான். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இந்த தூய்மைப் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில், எனக்கு மிகுந்த பெருமையை நான் தேடிக்கொள்கிறேன்."

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மிகுந்த பெருமையாகக் கருதுகிறேன். அதற்கு என்ன காரணம் என்றால், இது சென்னை கிழக்கு மாவட்டத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சி என்பதால் மட்டுமல்ல, சமுதாயத்தில் தன் வாழ்நாள் முழுவதும் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தந்தை பெரியார் திடலில், தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றமைக்குப் பெருமையாகக் கருதுகிறேன்.

நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து என்னை அழைத்து வந்த சகோதரி, உங்களின் மேயர் பிரியா அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல நிகழ்ச்சிகளை அவர் நடத்த வேண்டும். அண்ணன் சேகர்பாபு அவர்கள் பேசும்போது சொன்னார். இன்றைக்கு சகோதரி பிரியா அவர்கள் இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, பரிசு கிடையாது இது எங்களின் கடமை, இது உங்களின் உரிமை. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இரவு உணவு ஏற்பாடு செய்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள் இந்தத் தொகுதி முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் வைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும். பெருமைப்படுத்த வேண்டும் என்று சொன்னார். நான் அவரிடத்தில் சொல்லிக் கொள்வதெல்லாம் மேயர் பிரியா அவர்கள் இந்தத் தொகுதிக்கு மட்டும் மேயர் கிடையாது, ஒட்டுமொத்த சென்னை மாநகராட்சிக்கும் அவர் மேயர். சென்னை மாநகராட்சியில் இருக்கக்கூடிய அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் அழைத்து, என்னையும் அழைத்து இதேபோல பல நிகழ்ச்சிகளை அவர் நடத்த வேண்டும்.

உங்களின் பணி தூய்மைப் பணியாளர்களான உங்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. அதுவும் குறிப்பாக மழைக் காலங்களில், கோவிட் காலங்களில் உங்களின் உழைப்பு யாராலும் அளவிட முடியாதது. களத்தில் எங்கள் எல்லோருக்கும் முன், எங்களுக்கு தைரியம் சொல்லி களத்தில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்கள் நீங்கதான்.குறிப்பாக மழைக் காலங்களில் அண்ணன் சேகர்பாபு, நான், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் பிரியா நள்ளிரவு 2 மணி, 3 மணிக்கு அதிகமாக மழை பெய்கிறது. களத்துக்குச் சென்று, எங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று பார்ப்போம். அங்கு பணிகளை எல்லாம் முடுக்கி விடுவோம்னு என்று நினைத்து சென்று பார்த்தோம் என்றால், அங்கு எங்களுக்கு முன் களத்தில் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது யார் என்று பார்த்தீர்கள் என்றால், இங்கு வந்திருக்கக்கூடிய தூய்மைப் பணியாளர்களான நீங்கள்தான்.

மிகுந்த பெருமை நம் வீட்டில் ஒரு 5 வயது குழந்தை இருக்கிறது என்றால், காலையில் எழுந்து வீட்டில் இருக்காது. அது விளையாட போய்விடும். அந்த அழுக்கிலும், மண்ணிலும் புரண்டு விளையாடிவிட்டு, திரும்பி வீட்டுக்கு வரும்போது அந்த குழந்தையின் தாய் எவ்வளவு கோபம் வந்தாலும் அந்தக் குழந்தையை அடிக்க மாட்டார்கள். முதலில் அந்தக் குழந்தையைக் குளிக்க வைப்பார்கள். அதுபோல சென்னை என்ற அந்தக் குழந்தையை தினமும் வேலைக்கு அனுப்பி, விளையாட அனுப்பி அது வீட்டுக்கு வந்தவுடன் குளிக்க வைக்கின்ற தாய்மார்கள் இங்கு வந்திருக்கக்கூடிய நீங்கள்தான். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இந்த தூய்மைப் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிகுந்த பெருமையை நான் தேடிக் கொள்கிறேன்.எனவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கும், சகோதரி பிரியா அவர்களுக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, வந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன். இவ்வாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி அவர்கள் தெரிவித்தார்.