சென்னை: சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. மழை வெளுத்து வாங்கி வருவதால், ஒரே நாளில் பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 மில்லியன் கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து 301 கனஅடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 162 கனஅடியாக உள்ளது. நீர் இருப்பு 3118 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.67 அடியை எட்டியுள்ளது. சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டியுள்ளது. பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் 30.52 அடியை எட்டியுள்ளது. பூண்டி, புழல் ஏரிகளும் தற்போது நிரம்பும் நிலையில் உள்ளதால் அந்த ஏரிகளில் இருந்தும் விரைவில் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து அனைத்து ஏரிகளும் நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும் உள்ளன. இந்த 3 மாவட்டங்களிலும் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாவட்டத்தில் 5 ஏரிகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 ஏரிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 ஏரிகளும் நிரம்பி உள்ளது என்று நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பைவிட 35 விழுக்காடு அதிகமாக மழை பெய்ததால் முக்கிய ஏரிகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டுமளவுக்கு நீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் மற்றும் பூண்டி நீர்த் தேக்கங்கள் நிரம்பி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் 90 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.