சென்னை: கோடை காலத்தை போன்று சென்னை முழுவதும் நேற்று வெயில் சுட்டெரித்தது. சாலைகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு அனல் கக்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.சென்னையில் கடந்த வாரம் மாலை நேரங்களில் சற்று மழை பெய்தது. இந்த மழை சென்னை மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று காலை 9 மணி முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. காலை 11 மணிக்கு மேல் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரித்தது. இதனால், காலை நேரத்தில் அலுவலகத்திற்கு சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இரண்டு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் கடும் இன்னலை சந்திக்க நேரிட்டது. வாகனங்களில் ஏறிய சிறிது நேரத்தில் சட்டையை ஈரமாகும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. சிறிது தூரம் நடந்து சென்றாலே மயக்கம் அடையும் அளவுக்கு வெயிலின் உக்கிரம் இருந்ததை உணர முடிந்தது.
இதனால், பிற்பகல் 12 மணிக்கு மேல் தேவையில்லாமல் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்தனர். அதுமட்டுமல்லாமல் நேற்று அரசு மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையாகும். விடுமுறையை கொண்டாட நினைத்தவர்களுக்கு நேற்று அடித்த வெயிலால் அவர்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கோடைக்காலத்தில் இருப்பது போல அனல் கக்கியதை வீட்டில் இருந்தவர்கள் உணர முடிந்தது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நேற்று பிற்பகலில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து என்பது குறைந்த அளவிலயே காணப்பட்டது. விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் வாகனங்களை தான் பார்க்க முடிந்தது.வெயிலில் சிக்கி தவித்த மக்கள் மாலை 5 மணிக்கு மேல் இயற்கை காற்றை அனுபவிப்பதற்காகவும், பொழுதை போக்குவதற்காகவும் பூங்காக்கள், கடற்கரை பகுதியை நோக்கி படையெடுத்தனர்.