சென்னை: சென்னையில் பள்ளிச் சிறுமி லாரியில் அடிபட்டு இறந்த சம்பவத்தில் போக்குவரத்து உதவி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்தவர் யாமினி. இவர் தனது 10 வயதுக் குழந்தை சௌமியாவை பள்ளியில் விடுவதற்காக நேற்று காலை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அதன்படி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி ஒன்று வந்தது. இந்த லாரி யாமினி சென்று கொண்ட இருசக்கர வாகனத்தில் மோதியது. இதன் காரணமாகச் சிறுமி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரி ஏறி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் பொதுப்பாதையில் லாரியை இயக்க அனுமதித்ததை அடுத்து போக்குவரத்து உதவி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்திக்கு 17(அ) நேட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1976-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து உயரதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வு தற்காலிக நிறுத்தம் அல்லது பதவி இறக்கம் என இரண்டில் ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.