Saturday, September 23, 2023
Home » சென்னை பள்ளி  மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில்  ACADEMY OF STEM EXCELLENCE என்ற பயிற்சியினை தொடங்கி வைத்தார் மாநகராட்சி மேயர்

சென்னை பள்ளி  மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில்  ACADEMY OF STEM EXCELLENCE என்ற பயிற்சியினை தொடங்கி வைத்தார் மாநகராட்சி மேயர்

by MuthuKumar
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயரால் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் அறிவிப்பு எண்.26ன்படி, சென்னை பள்ளிகளில் பயிலும் மிகச்சிறந்த மாணவர்களை பொதுவான தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து, நேரடியாகவும் மற்றும் இணையதளம் வழியாகவும் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதனடிப்படையில், சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை தேர்வு செய்து, பொதுத் தேர்வுடன் கூடிய NEET, CUET, CLAT, HT-JEE, ICAR, NDA, NATA, NIFT போன்ற மதிப்புமிகு நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக ACADEMY OF STEM EXCELLENCE என்ற பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை பள்ளிகளில் பள்ளிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சியும், மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக பாதுகாப்பான தங்கும் விடுதிகளும், அவரவர் பள்ளிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதியும், ஆரோக்கியமான உணவு, குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், மெய்நிகர் வகுப்பறைகள், இணையவழி கல்விக்காக அனைவருக்கும் கையடக்கக் கணினிகள், 8000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலகம் உள்ளிட்ட வசதிகளும், பயிற்சியும் அனுபவமும் மிக்க ஆசிரியர் குழுக்களுடன் தொடர் தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் நடத்தப்பட்டு, குறைதீர் கற்பித்தல், மருத்துவ ஆலோசனைகள், உளவியல், ஆளுமைத் திறன், தலைமைப் பண்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படுவது சிறப்பம்சமாகும்.
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் ACADEMY OF STEM (Science Technology Engineering and Mathematics) EXCELLENCE பயிற்சி நடைபெறும் கட்டடத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று (09.08.2023) திறந்து வைத்து, பயிற்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  சென்னை பள்ளிகளில் பள்ளிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற 35 மாணவ,  மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவ, மாணவியருக்கு  புத்தகப்பை, நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வாட்டர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மேயர் வழங்கி, மாணவர்களுடன் கலந்துரையாடி அறிவுரைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, மேயர் அந்தப் பள்ளியின் நூலகம், அலுவலக அறை மற்றும் கழிப்பறையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, மேயர் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், இந்தப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயிலும் 74 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன்,  துணை மேயர் மு. மகேஷ்குமார், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, கல்வி அலுவலர் மற்றும் உதவிக் கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?