சென்னை: சென்னையில் ரூ.1.30 கோடி அளவுக்கு கள்ளநோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி(26). இவர் தனது சகோதரன் தினேஷ் என்பவருடன் இணைந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர்கள் கடைக்கு கடந்த 17ம் தேதி மாலை வயதான நபர் ஒருவர் ரூ.670க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கி கொண்டு 2 புதிய ரூ.500 நோட்டுகள் கொடுத்துள்ளார். உடனே கடையில் பணியாற்றும் வீராசாமி வழக்கத்தை விட இந்த ரூபாய் நோட்டுகள் சற்று வழுவழுப்பாக இருப்பதை உணர்ந்து, கடையின் உரிமையாளர் தினேஷிடம் கொடுத்தார்.
அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி சரிபார்த்த போது, அது போலியான கள்ள ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. உடனே தினேஷ் மற்றும் கடை ஊழியர் வீராசாமி ஆகியோர் கள்ள நோட்டுகளை கொடுத்த முதியவரை பிடித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, பள்ளிக்கரணை பாலாஜி நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை(64) என்று தெரியவந்தது. கள்ள நோட்டு குறித்து அவர் அளித்த தகவலின்படி போலீசார் விருகம்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனி 3வது தெருவை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியன்(52) என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இருந்து 90 கட்டுக்கள் கொண்ட ரூ.500 நோட்டுகள் கொண்ட ரூ.45.20 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ள நோட்டுக்கள் அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைத்திருந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியன் மற்றும் ராணுவ வீரர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி கள்ள நோட்டுக்கள் அச்சடித்து கொடுத்த ஊழியர் கார்த்திகேயன் மற்றும் அச்சக உரிமையாளர் வினோத்குமார் ஆகியோரை கைது செய்தனர். அச்சக உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், வழக்கறிஞர் சுப்பிரமணியன் ‘கோடீஸ்வரன்’ என்ற குறும் படம் எடுக்க போலி ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து ெகாடுக்கும்படி கூறியதால், நான் ரூ.1.30 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் அச்சடித்து கொடுத்தேன் என்று கூறினார். அதேநேரம், குறும்படம் எடுத்த திருவொற்றியூரை சேர்ந்த இயக்குநர் ஒருவருக்கு ரூ.11 லட்சம் கள்ளநோட்டுக்களை ஊதியமாகவும் வழக்கறிஞர் சுப்பிரமணியன் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், வழக்கறிஞர் தனது நண்பர்கள் மூலம் சென்னை முழுவதும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள ரூ.500 கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விட்டு இருப்பதும் விசாரணையில் உறுதியானது. இந்த மோசடி பின்னணியில் பல முக்கிய நபர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து கள்ள நோட்டு வழக்கு உயர் போலீசார் பரிந்துரைப்படி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கள்ள நோட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அதேநேரம், கள்ள நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கறிஞர் சுப்பிரமணியன், அவரது நண்பரும் முன்னாள் ராணுவ வீரருமான அண்ணாமலை மற்றும் கள்ள நோட்டுக்கள் அச்சடித்து கொடுத்த கார்த்திகேயன், அச்சக உரிமையாளர் வினோத் குமார் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.