மீனம்பாக்கம்: ஓமன் நாட்டிலிருந்து நேற்று சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்தபோது, பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த பயணியிடம் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு 164 பயணிகளுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்தபோது, விமானத்தில் பயணம் செய்த செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை சேர்ந்த சுரேந்தர் (34) என்ற பயணி மதுவை வாங்கி அதிகளவில் அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர், சக பயணிகளிடம் சுரேந்தர் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவரை விமானப் பணிப்பெண்கள் கண்டித்தும் கேட்கவில்லை.
மேலும் சுரேந்தர் ஆத்திரமாகி, தன்னுடன் அமர்ந்திருந்த சக பயணியை தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், தாக்க முயற்சித்து, விமானம் நடுவானில் பறந்தபோது எழுந்து நின்று ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை விமானியிடம் பணிப்பெண்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மதுபோதையில் ரகளை செய்த சுரேந்தர் அருகே அமர்ந்திருந்த சக பயணிகள் மாற்று இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தலைமை விமானி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தயார்நிலையில் காத்திருந்தனர். பின்னர் நேற்று மாலை ஓமனில் இருந்து வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து, விமானத்துக்குள் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று, அங்கு மதுபோதையில் இருந்த சுரேந்தரை மடக்கி பிடித்து, விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதோடு, அவருக்கு குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனைகளை விரைந்து முடித்து, அவரை விமான நிலையத்தில் உள்ள இன்டிகோ ஏர்லைன்ஸ் கவுன்டருக்கு அழைத்து வந்தனர்.
அப்போதும் குடிபோதையில் இருந்த சுரேந்தர், என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. நான் யார் என்பதை காட்டுகிறேன் என்று வீராவேசமாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை சென்னை விமானநிலைய போலீசாரிடம் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும், சுரேந்தர்மீது புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடுவானில் விமானம் பறந்தபோது சக பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்களிடம் மதுபோதையில் ரகளை செய்த சுரேந்தரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.