சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-நெல்லை இடையே வரும் 10ம் தேதி தனியார் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான ரயில் கட்டணம் ரூ.3ஆயிரம் என்பதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தற்போது சிறப்பு கட்டண ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. இந்த சூழலில் கூட்டத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 13 வரை மூன்று நாட்களுக்கு பிரீமியம் கட்டணத்தில் ரயில்களை இயக்கப் போவதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ரயில் வரும் 10ம் தேதி இரவு எழும்பூரிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு நெல்லைக்கு சென்றடைகிறது. அதேபோல மறு மார்க்கமாக திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனம் 3 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. எழும்பூரில் இருந்து மதுரைக்கு 3 அடுக்கு ஏசி படுக்கைக்கு ரூ.2000, 2ம் வகுப்பு ஏசி படுக்கைக்கு ரூ.3000 என தனியார் நிறுவனம் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ரயிலை (எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வே) என்ற தனியார் நிறுவனம் இயக்கவுள்ளது. இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘திருவிழா காலங்களில் பொதுமக்களிடம் தேவை அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. எனவே, அதுபோன்ற நேரத்தில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். ஆனால், இந்த சிறப்பு ரயில்களை தனியார் நிறுவனங்களை இயக்க அனுமதிப்பதை ஏற்க முடியாது. கட்டணமும் பல மடங்கு உள்ளது’’ என்றனர்.