Friday, July 18, 2025
Home செய்திகள்Showinpage சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்” நடைபெறும்..!!

சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்” நடைபெறும்..!!

by Nithya

சென்னை: சாகித்திய அகாதெமி, ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் – சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்” சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 27.06.2025 மற்றும் 28.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையுரை ஆற்றவுள்ளார்.

தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது 20-ஆம் வயது முதல் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுவதும் எழுத்தாகவும், பேச்சாகவும் மூச்சாகவும் வாழ்ந்து, 80 ஆண்டுகாலம் பொது வாழ்வு, ஐந்துமுறை முதலமைச்சராக ஆட்சிபுரிந்தது மட்டுமல்லாமல், 75 திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களையும் 15 புதினங்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்கள்.

மேலும், “நண்பனுக்கு”, “உடன்பிறப்பே” எனும் தலைப்புகளில் 7000-க்கும் மேற்பட்ட கடிதங்களும் “கரிகாலன்” என்னும் பெயரில் கேள்வி பதிலும் எழுதியிருக்கிறார். இதைத் தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஏறத்தாழ 7 இலட்சம் பக்கங்களுக்கு மேல் இருக்கும். பள்ளிப் பருவம் தொடங்கி அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் பாராட்டுக்குரியவை.

கவித்துவமும் இலக்கியத் திறனும் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படைப்பாற்றலைப் போற்றும் வண்ணம் சாகித்திய அகாதெமி மற்றும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் – சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து முதன்முறையாக “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்”, 27.06.2025 மற்றும் 28.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடத்தவுள்ளது. தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்த உள்ளார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில், சாகித்திய அகாதெமி செயலர் முனைவர் கே. ஸ்ரீனிவாசராவ் வரவேற்புரையும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் சிறப்புரையும் ஆற்றவுள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கம் மூன்றாம் தளத்தில் உள்ள சிற்றரங்கில் “கவிதை” என்கிற அமர்வு 1-இல் “தனித்து ஒளிரும் நட்சத்திரம்” என்ற தலைப்பில் கவிஞர் இமையம் அவர்களும், “கவிதையியல் நோக்கில் கலைஞரின் கவிதைகள்” என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும், “கலைஞரின் கவிதைகள்: அரசியலும் அழகியலும்” என்ற தலைப்பில் முபீன் சாதிகா அவர்களும், “புனைகதை” என்கிற அமர்வு 2-இல் கருத்தாடலியல் நோக்கில் “பொன்னர் சங்கர் புதினம்” என்ற தலைப்பில் ந.நடராசப்பிள்ளை அவர்களும், “கலைஞரின் சிறுகதைகளில் சமூகச் சமத்துவம்” என்ற தலைப்பில் பாரதிபாலன் அவர்களும், “ரோமாபுரிப் பாண்டியன்வழி வணிக உறவை எழுதுதல்” என்ற தலைப்பில் மு.ரமேஷ் அவர்களும் “செவ்வியல்” என்கிற அமர்வு 3-இல் “கலைஞர் திருக்குறளுரையின் சிறப்பியல்பும் நடைமுறைப்பாங்கும்” என்ற தலைப்பில் மறைமலை இலக்குவனார் அவர்களும், “சிலப்பதிகாரம்: கலைஞரின் பங்களிப்பு” என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார் அவர்களும், “தொல்காப்பியப் பூங்கா: ஒரு கதை கூறல் உரை” என்ற தலைப்பில் ரா. செயராமன் அவர்களும், “கலைஞரின் சங்கத் தமிழ்: கவிதைக் கட்டமைப்பு” என்ற தலைப்பில் தி.மோகன்ராஜ் அவர்களும் கட்டுரை வாசிக்கவுள்ளனர்.

இதேபோன்று, 28.06.2025 (சனிக்கிழமை) இரண்டாம் நாள் நிகழ்வில் “நாடகம்” என்கிற அமர்வு 4இல் “கலைஞரின் நாடகங்கள் சித்திரிக்கும் திராவிட இயக்கக் கருத்தியல்” என்ற தலைப்பில் ந.முருகேசபாண்டியன் அவர்களும், “பாமரர்க்கும் தமிழின் ருசியைக் கடத்திய மு.க.வின் நாடகங்கள்” என்ற தலைப்பில் ரவிசுப்பிரமணியன் அவர்களும், “எதிர் அடையாள அரசியலை நிகழ்த்தும் கலைஞரின் நாடகங்கள்” என்ற தலைப்பில் எல்.ராம்ராஜ் அவர்களும், “திரைவசனம்” என்கிற அமர்வு 5-இல் “கலைஞரின் திரைமொழி: ராஜா ராணியில் இலக்கிய மாட்சி” என்ற தலைப்பில் இரா.சுப்பிரமணி அவர்களும், “கலைஞரின் நாடக – திரைமொழி” என்ற தலைப்பில் நா.சந்திரசேகரன் அவர்களும், “உரைநடை” என்கிற அமர்வு 6-இல் “கவிதைப் பண்புகளால் கட்டமைந்த கலைஞர் கடிதங்கள்” என்ற தலைப்பில் எல்.இராமமூர்த்தி அவர்களும், “அரசியல் வரலாறான தன்வரலாறு” என்ற தலைப்பில் பழ.அதியமான் அவர்களும், “இளைஞரும் கலைஞரும்” என்ற தலைப்பில் தே.சங்கர சரவணன் அவர்களும் கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கவுள்ளனர்.

நிறைவு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையுரையும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள் நிறைவுரையும் சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் இரா.தாமோதரன் அவர்கள் நன்றியுரையும் ஆற்றவுள்ளார்கள்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi