சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் 28.11.2024 முதல் 04.12.2024 வரை நகர்ப்புர சமுதாய நல மையங்களில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் (NO SCALPEL VASECTOMY) 28.11.2024 முதல் 04.12.2024 வரை 15 மருத்துவ மண்டலங்களில் உள்ள நகர்ப்புர சமுதாய நல மையங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. தேசிய குடும்ப நலத்திட்டத்தில் ஆண்களின் பங்கு அரிதாக இருக்கிறது.
மனைவியின் நலத்தைக் காக்க ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால், இந்தக் கருத்தடை சிறப்பு முகாமில் ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம்களில், கத்தி உபயோகப்படுத்தாமலும் தையல், தழும்பு இல்லாமல் புதிய எளிய முறையில் செய்யப்படுவதால் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமின்றி, சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு செல்லலாம் என்பதால், இந்த எளிமையான கருத்தடை சிகிச்சை முறையில் தகுதி வாய்ந்த ஆண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ1,100/-, ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு ரூ.200/-ம் வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.