சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் மழைக் காலத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைய நேரிடுகிறது. தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி விட்டதால், மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. அந்த வகையில் ரூ.92 கோடியே 74 லட்சம் செலவில், சென்னையில் 14 மண்டலங்களில் 346 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. இதையொட்டி ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு, பணி ஆணை மே மாதத்துக்குள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதில்,உள்புறச் சாலை, பேருந்து வழித்தடம், சிமென்ட் கான்கிரீட் சாலை, தார்ச்சாலை என சாலை சீரமைப்புப் பணியானது 21 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதிலும் 3 பேக்கேஜ் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. முதலாவது பேக்கேஜின்படி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரத்தில் ரூ.4 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 24 சாலைகள் தரம் மேம்படுத்தப்பட உள்ளன. இரண்டாவது பேக்கேஜ்படி, மாதவரம், ராயபுரம், அண்ணா நகர் மண்டலங்களில் ரூ.4 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் 18 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. மூன்றாவது பேக்கேஜ்படி, மணலி, மாதவரம் திரு வி.க.நகர், அண்ணா நகர் மண்டலங்களில்ரூ. 4 கோடியே 53 லட்சம் செலவில் 21 சாலைகள் தரம் உயர்த்தப்படுகின்றன.
ஒரே ஒப்பந்ததாரருக்கு அனைத்து வேலைகளையும் கொடுத்து வேலை பளுவை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக பலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் சாலையின் தரம் எவ்வளவு தான் உயர்த்தப்பட்டாலும் பெருமழைக்குத் தாங்குவதில்லை. மீண்டும் மீண்டும் சாலை போட வேண்டிய கட்டாயத்துக்கு மாநகராட்சி தள்ளப்பட்டிருக்கிறது.