சென்னை: விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023-2024ம் ஆண்டுக்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2023ம் ஆண்டு ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் மீண்டும் நடத்தப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு முதல்வர், சென்னையில் சர்வதேச அளவிலான ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி- 2023 நடத்திட தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.17.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார். ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023 போட்டிகள் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்புபணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தனர்கள் அமருவதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் பிறசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு உயர் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் இந்த போட்டிகளில் பங்கேற்க வரும் சர்வதேச ஹாக்கி வீரர்கள் தங்கும் நட்சத்திர விடுதிகள், உணவு, போக்குவரத்து வசதிகள், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறையின் செயலாளர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் ஷிப் – 2023 போட்டியினை நடத்துவதற்காக அரசின் நிதியுதவியாக ரூ.12 கோடிக்கான காசோலையினை ஹாக்கி இந்தியா, பொதுச் செயலாளர் போலாநாத் சிங்கிடம் வழங்கினார்.