சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை கடையாக மாற்றி டெண்டர் மோசடியில் ஈடுப்பட்ட சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானியங்கள் கடைகளில் விற்பனையாகாத கடை ஏலம் விடுவதற்கான டெண்டர் சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் மூலம் அறிவிக்கப்பட்டது.
கோயம்பேடு மொத்த மார்க்கெட் வளாகத்தில் இருக்கும் இடத்தை பொறுத்து கடைகள் ஒத்துக்கீடு செய்யும் போது சதுரடி ரூ.23,750 முதல் ரூ.26,250 சதுரடிக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளராக இருந்த சீனிவாச ராவ் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிஎம்டிஏ தலைமை செயற்பொறியாளர் பெரியார் காய்கறி மார்க்கெட்டில் VH83 எண் கொண்ட கடையை முறைகேடாக ஒதுக்கியுள்ளார்.
அதாவது செந்தில்குமார் என்பவருக்கு அதிக தொகை டெண்டர் கேட்டதாக கூறி 1061 சதுரடி மற்றும் 201 சதுரடி உள்ள இடத்தில் உணவகம் அமைப்பதற்கான இடத்தை 2 கோடியே 18 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 3 கோடியே 5 லட்சத்து 22 ஆயிரத்து 450 ரூபாய்க்கு டெண்டர் விடவேண்டிய இடத்தை குறைவான தொகைக்கு ஏலம் விட்டு அரசுக்கு ரூ.86,87,450 இழப்பீடு ஏற்படுத்தியது விசரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மோசடி செய்து சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் சீனிவாசன் ராவ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.