சென்னை: சென்னை கிண்டியில் கத்திப்பாரா அருகே 800 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் புனித தோமையார் மலை பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் நான்கரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. குத்தகைக்கு இடத்தை பெற்று பயன்படுத்தி வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இதுவரை எந்த விதமான குத்தகை பணமும், வாடகையும் தரப்படவில்லை.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பெயரில் பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகைகளை வைத்தனர். ஆக்கிரமிப்பு நிலத்தில் இயங்கி வந்த அரசு உடைமை வங்கி உட்பட 30 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடம் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்புடையது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பல்லாவரம் வட்டத்துக்கு உட்பட்ட கத்திப்பாரா புனித தோமையர் மலை கிராமங்களில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள அரசு நிலங்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.