சென்னை: சென்னை – யாழ்ப்பாணம் இடையே இண்டிகோ புதிய விமான சேவை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கயுள்ளது. சென்னையில் பிற்பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். மாலை 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை வந்தடையும். இதற்கான பயணக்கட்டணம் ரூ.7,604 ஆக நிர்ணயம் செய்துள்ளது. கொழும்பு நகரத்திற்கு ஏற்கனவே விமான சேவை செயல்பட்டு வரும் நிலையில் வேறொரு நகரத்திற்கு விமானத்தை இயக்க இண்டிகோ திட்டமிட்டது. அந்த வகையில் விமான சேவைக்கு இரண்டாவது நகரமாக யாழ்ப்பாணத்தை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை பொறுத்தவரையில் ஏகபோகமான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது இண்டிகோ. இந்தியாவில் இயக்கப்படும் 63.4 சதவீத உள்நாட்டு விமானங்கள், இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமானவை. இந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை தொடங்கியுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல், சென்னை, யாழ்ப்பாணம் இடையே தினசரி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
வணிகம், உள்கட்டமைப்பு மேம்பாடு, விமான போக்குவரத்து ஆகிய துறைகளில் இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு பேணப்பட்டு வரும் நிலையில், தொடங்கப்பட்டுள்ள புதிய விமான சேவை இரு நாடுகளுக்கு இடையேயான கலாசார, வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு சென்ற மொத்த சுற்றலாவாசிகளின் எண்ணிக்கையில் 25.2 சதவிகிதத்தினர் இந்தியர்கள் ஆவர். கடந்தாண்டு ஜூன் மாதம், இலங்கைக்கு 26,830 இந்தியர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அதாவது, மொத்த சுற்றுலாவாசிகளில் 26.7 சதவிகிதம்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கி வகிக்கும். சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமானங்களைத் தவிர, இந்தியாவில் 4 இடங்களில் இருந்து கொழும்புக்கு 30 வாராந்திர விமான சேவையை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இணைப்பு மற்றும் மேம்பட்ட அணுகல்தன்மையை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்றார்.