சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கங்களின் ஆலோசனைகளை பெற்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திட, திரவ கழிவுகளை முறையாக மேலாண்மையை செய்து குப்பைகள் இல்லாத தூய்மையான வளாகமாக பராமரிக்க கோரி ராஜ்குமார் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் 70 நாய்கள் சுற்றித் திரிவதாகவும், ஆனால் நாய்கள் யாரையும் துரத்தியதாகவோ, கடித்தாகவோ எந்த சம்பவமும் இல்லை என்றும் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களால் எதிர்காலத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
எனவே, நாய்கள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டத்தை கூட்டி, ஆலோசனைகளை பெற்று 8 வாரங்களில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அறிக்கை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.