சென்னை: தெற்கு ரயில்வேயில் முக்கியமான கோட்டமாக சென்னை ரயில்வே கோட்டம் உள்ளது. சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் இக்கோட்டம் பெரும் பங்கு வகிக்கிறது. 697 கி.மீ தொலைவுக்கான எல்லையை இந்த கோட்டம் கொண்டுள்ளது. இந்த ரயில்வே கோட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் மார்க்கம், சென்னை சென்ட்ரல்-பொன்னேரி- கும்மிடிப்பூண்டி மார்க்கம், சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கம், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கம் ஆகிய மார்க்கங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த மார்க்கங்கள் வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கின்றன. சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வேலைக்காகவும், கல்விக்காகவும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் நகரத்துக்கு வந்து செல்கின்றனர். மின்சார ரயில்களை பொறுத்தவரை சுமார் 650 சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் 10 லட்சம் பேர் பயணிக்கின்றனர். குறைவான கட்டணம், குறிப்பிட்ட இடத்தை விரைவாக அடையும் வசதி ஆகியவற்றால் ஏழை, நடுத்தர மக்களுக்கு மின்சார ரயில்கள் வரப்பிரசாதமாக உள்ளன. புறநகர் ரயில்சேவை போல, நெடுந்தொலைவுக்கு செல்லும் விரைவு ரயில்களும் இந்த வழித்தடங்கள் வழியாக இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தென், மத்திய, மேற்கு மாவட்டங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் நாள்தோறும் 250க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், மெயில், அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த ரயில்கள் எல்லா தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையவில்லை என்பதே உண்மை. சென்னை கடற்கரை – தாம்பரம் வரை இரு மார்க்கமாக தினசரி 250 மின்சார ரயில் சேவை வழங்கப்படுகின்றன. நெரிசல் மிகுந்த நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
இதுதவிர, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் அடுத்த நிறுத்தமாக தாம்பரம் ரயில்நிலையத்தில் நின்று செல்கிறது. இது தென்சென்னை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
அதேநேரத்தில், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதல் மின்சார ரயில்சேவை இல்லாததால், பயணிகள் நெரிசலுடன் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் விரைவு ரயில்கள் நின்று செல்ல நிறுத்தம் வழங்கப்படாததால் நெடுந்தொலைவு போக்குவரத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.
அடிக்கடி இப்பகுதியில் மின்சார ரயில்கள் சிக்னல் கிடைக்காமல் மணிக்கணக்கில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 1 மணி நேரத்தில் செல்ல வேண்டிய பயணம் 2 மணி நேரமாக உள்ளது. சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே உள்ள உள்ளூர் ரயில்கள் சாலை மார்க்கமாக பயண நேரத்தை விட குறைந்தது 40-50 நிமிடம் அதிகமாக எடுத்துக் கொள்கிறது, தென்சென்னை மற்றும் வட சென்னைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தென் சென்னை பகுதியில் பல போக்குவரத்து வசதிகள் இருக்கிறது. மேலும், அத்திப்பட்டு புதுநகர் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான 25 கி.மீ தூரத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது பாதை அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரையிலான 46 கி.மீ. பயணத்துக்கு ரயில்கள் இரண்டு மணி நேரம் எடுக்கும். அதே நேரத்தில் சென்னை-செங்கல்பட்டு மற்றும் சென்னை-அரக்கோணம் வழித்தடங்களில் சாலை வழியாக 70 நிமிடங்கள் மட்டுமே ஆகும். அத்திப்பட்டுக்கு அப்பால், விரைவு ரயில்கள் கடந்து செல்வதற்காக புறநகர் ரயில்கள் அடிக்கடி நிலையங்களில் நிறுத்தப்படுகின்றன. இந்த பிரிவுகளில் இரவு நேரங்களில் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட்டிற்கு நாளொன்றுக்கு 5,000க்கும் அதிகமானோர் பணிக்கு செல்கின்றனர். இவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும், கும்மிடிப்பூண்டி பிரிவு புறக்கணிக்கப்படுகிறது .சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே தினமும் 95 ஆயிரம் பயணிகள் பயணிக்கின்றனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது: தெற்கு ரயில்வேயின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக அமையவுள்ள அத்திப்பட்டு முதல் கும்மிடிப்பூண்டி வரை (22.52 கி.மீ) 3வது மற்றும் 4வது ரயில் பாதைகளை அமைக்கும் புதிய திட்டம் ரூ.365.42 கோடி மதிப்பில் அமைக்க தற்போது கருத்தில் கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த மைல்கல் திட்டம் பயணிகள் பயணத்தை மேம்படுத்துவதோடு, இந்திய ரயில்வேயின் உயர் அடர்த்தி போக்குவரத்து நெட்வொர்க்கை பலப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்திப்பட்டு-கும்மிடிப்பூண்டி பகுதி டெல்லி-சென்னை மற்றும் சென்னை-பெங்களூரு தொழில்துறை சாலைகளின் முக்கிய பகுதியாக உள்ளது. தற்போதைய ரயில் பாதை திறன்பயன்பாடு 100 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், 2027-28ல் இது 107 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், இயக்கத் திறனை மேம்படுத்தவும் இந்த புதிய பாதைகள் அவசியமாகியுள்ளன. மேலும், அத்திப்பட்டு முதல் கூடூர் வரை நான்கு பாதைகளை உருவாக்கும் ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த திட்டம் நிறைவேறினால், இயக்க நேரம் கணிசமாக குறையும் மற்றும் 8.71 மில்லியன் டன்கள் (MTPA) கூடுதல் போக்குவரத்து சாத்தியமாகும். நிதி விகிதம் (FIRR) 15.84 சதவீதம் மற்றும் பொருளாதார இறையாண்மை விகிதம் (EIRR) 28.88 சதவீதமாக உள்ளதால், இது பொருளாதார ரீதியாகவும் லாபகரமான திட்டமாக அமையும். இதனால், பயணிகள் மட்டுமல்லாது, சரக்கு போக்குவரத்திலும் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுப்பினர் (உள்கட்டமைப்பு), உறுப்பினர் (செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாடு), உறுப்பினர் (நிதி) மற்றும் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோரின் உயர்மட்ட ஆதரவுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது ரயில்வே அமைச்சரின் ஒப்புதல் கோரப்பட்டுள்ள நிலையில், இது ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை உருவாக்கும் என நம்பப்படுகிறது. இந்த திட்டம் வெற்றி பெறுவதற்கு அப்பால், அத்திப்பட்டு முதல் கூடூர் வரை நான்கு பாதைகள் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தெற்கு இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் இன்னும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புரட்சிகர திட்டம் நிறைவுறும் வரை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரயில்வே நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கைகள் இதற்கு அவசியமாகும். இவ்வாறு தெரிவித்தார். இந்த திட்டம் செயல்படுத்தப்படால் இவ்வழித்தட மக்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும். சென்னை- கும்மிடிப்பூண்டி இடையே தினமும் 95,000 பயணிகள் பயணிக்கின்றனர்.