புழல்: சென்னையில் இருந்து தஞ்சைக்கு காதலனை தேடி வந்த 14 வயது சிறுமி வீட்டில் பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். காதலனும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் நின்று கொண்டிருந்த 24 வயது வாலிபர், 14 வயது சிறுமியை பிடித்து விசாரணை நடத்தியதில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார், இருவரையும் மீட்டு வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் சின்னக்கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (24). கூலித்தொழிலாளியான இவர், சென்னையில் வேலை பார்த்தபோது நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதை சிறுமியும் நம்பி அவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெகதீஸ்வரன் சென்னையிலிருந்து தனது ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமி, ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்தபோது தஞ்சைக்கு புறப்பட்டு வா என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த பணத்துடன் சிறுமி, கடந்த 13ம் தேதி தஞ்சாவூருக்கு புறப்பட்டுள்ளார். இத்தகவலை ஜெகதீஸ்வரனுக்கும் தெரிவித்துள்ளார். அப்போது ஜெகதீஸ்வரன், இப்போது பேசிக்கொண்டு இருக்கும் சிம்கார்டை கழற்றிவிட்டு வேறு ஒரு சிம்மில் இருந்து பேசு என்று சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் தஞ்சாவூர் வந்த சிறுமி, ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்டும் ஜெகதீஸ்வரன் போனை எடுக்கவே இல்லை. மறுபடியும் தொடர்பு கொள்ளவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது அழுது கொண்டே தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது இதை கவனித்த ஒருவர், அந்த சிறுமியை அணுகி எதற்காக அழுகிறாய் என்று கேட்க தன்னை பற்றிய விவரங்களை சிறுமி அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த நபர், என் வீட்டிற்கு வா. பின்னர் உன் காதலனுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் எனக்கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், இதில் அவர், தஞ்சை அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவரான புவனேஸ்வரன் (30) என்பதும், வீட்டில் மனைவி இல்லாத நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். மேலும் சிறுமியின் காதலன் ஜெகதீஸ்வரனையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சிறுமி பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.