ஒரத்தநாடு: தஞ்சாவூர் அருகே சென்னை இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 22 வயதான பட்டதாரி பெண் சென்னையில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் வந்திருந்த இவர், கடந்த 12ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார்.
இதனை நோட்டமிட்ட பாப்பாநாடு அடுத்த தெற்கு கோட்டை பகுதியை சேர்ந்த கவிதாசன்(25), இவரது கூட்டாளிகள் பிரவீன்(20), திவாகர்(27), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வீட்டிற்குள் புகுந்து, அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அருகே உள்ள கீற்று கொட்டகைக்கு தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி, பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கவிதாசன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான கவிதாசன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கல்யாண ஓடை பகுதியை சேர்ந்த அதிமுக அமைப்பு செயலாளர் செந்தில் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், தமிழ்நாடு பாஜ பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள பாஜ பிளக்ஸ் பேனரில் கவிதாசனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. கவிதாசன் மீது கொலை வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, பாப்பாநாடு கடை வீதியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்று மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.