திருமலை: ஆந்திர மாநிலத்தில் நள்ளிரவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கி கொண்டிருந்த 3 பெண் பயணிகளிடம் மர்ம நபர்கள் தங்க செயின்களை கொள்ளையடித்தனர். மற்றொரு ரயில் மீது கற்களை வீசி கொள்ளை முயற்சி நடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், ஆந்திர மாநிலம் பிடுகுரல்லா மண்டலம், தும்மல்செருவு ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் கொள்ளையர்களில் சிலர் பயணித்ததாக தெரிகிறது. அவர்கள் ரயிலின் எஸ்-6 மற்றும் எஸ்-7 ஸ்லீப்பர் பெட்டிகளில் சங்கிலியை இழுத்து ரயிலை நடுவழியில் நிறுத்தினர். அங்கு ஏற்கனவே காத்திருந்த கொள்ளையர்களும் ரயில் பெட்டியில் புகுந்தனர்.
பின்னர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 3 பெண் பயணிகளின் கழுத்தில் இருந்த தங்க செயினை அறுத்தனர். அவர்கள் அலறி எழுந்து தடுக்க முயன்றும் முடியவில்லை. மேலும் அக்கம் பக்கத்தில் இருந்த பயணிகள் மடக்கி பிடிக்க முயன்றபோது, மிரட்டல் விடுத்தபடி ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பினர். இதுகுறித்து செகந்திரபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நடிக்குடி ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நரசாப்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் மீது மர்மநபர்கள் கற்களை வீசி ரயிலை நிறுத்தி ஏற முயன்றனர். ஆனால் பி-1, எஸ்-11, எஸ்-12 ஆகிய பெட்டிகளில் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் அவர்களால் ஏற முடியவில்லை. இதற்கிடையில் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து ரயில்களில் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.