சென்னை: சென்னையில் மின்சார பேருந்துகளின் சேவையை ஜூன் 30ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 5 பணிமனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 5 பணிமனைகள் முற்றிலுமாக மின்சார பேருந்து இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை வியாசா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பராமரிப்புக் கூடம், அலுவலக நிா்வாக கட்டடம், பணியாளா் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்படுவதுடன், புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்களை நிறுவுதல் போன்ற கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகளின் சேவையை ஜூன் 30ம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நடப்பாண்டு இறுதிக்குள் சென்னை முழுவதும் 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் போக்குவரத்துத் துறை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் நவீன வசதிகளுடன் மின்சார பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.