தர்மபுரி: தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை, பஸ் நிலையத்திற்கு குடிபோதையில் வந்த இளம்பெண்கள் 2 பேர், பொதுமக்களிடம் வம்பிழுத்துள்ளனர். பின்னர், மறைவான இடத்தில் வாலிபர் ஒருவருடன், தகாத செயலில் ஈடுபட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் சிலர், அவர்களை கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்கள், ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளனர். அந்த நேரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார், பஸ் நிலையத்திற்கு வந்த போது, அவர்களிடம் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதை கண்டதும், போலீசாரை நோக்கி ஆவேசமாக வந்த அந்த இளம்பெண்கள், ‘இங்கு சீரியல், கேமரா எதுவும் இருக்காது. எல்லாத்தையும் காலி பண்ணிருவோம்’ என்றனர். மேலும், அதில் ஒரு பெண், போலீஸ்காரரை தள்ளி விட்டார். இதை கேட்டுக்கொண்டிருந்த போலீசாரின் அருகிலிருந்த பயணி ஒருவர், நீங்கள் எந்த ஏரியா என கேட்டார். ‘நாங்கள் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள், காசிமேட்டுல கோட்ரஸ்.. பர்மா நகர் தெரியுமா. பர்மா நகர்ல தனசேகர் தெரியுமா.. தனசேகர் வந்தா கிழிச்சி தொங்கவுட்ருவாரு.. அவரு பேர கேட்டா உனக்கு அல்லு உடாது.. உயிரவே உட்ருவ. நீயெல்லாம் பேசவே கூடாது போய்ட்டே இரு,’ என்றனர். அப்போது, அந்த பயணி உள்ள போகணுமா (சிறைக்கு) என்கிறார். இதனால், போதையிலிருந்த அந்த பெண்கள் சூடாகி, ‘நீ யாரு.. நீயெல்லாம் இதெல்லாம் பேசவே கூடாது..’ என தகாத வார்த்தையால் திட்டி, அவரை அடிக்க பாய்ந்து தள்ளி விட்டனர்.
அப்போது, போலீஸ்காரர் அவரை நாங்க பார்த்துக்கறோம். நீங்க இருங்க எனக்கூறி அவரை அனுப்பினர். ஒரு இளம்பெண் சிகரெட் புகைத்தவாறே போலீசாரிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த பெண்கள் குடிபோதையில் இருந்ததால், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அமைதியாக இருந்தனர். தொடர்ந்து ரகளை செய்தபடி இருந்த அவர்கள், பின்னர் கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் ஏறி புறப்பட்டு சென்றனர். இதனால், தர்மபுரி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் கூறுகையில், ‘சென்னையில் இருந்து தர்மபுரிக்கு மசாஜ் வேலைக்கு, 2 இளம்பெண்கள் வந்துள்ளனர். வேலை முடிந்து சென்னைக்கு புறப்படுவதற்காக நேற்று(நேற்று முன்தினம்) அதிகாலை பஸ் நிலையத்திற்கு வந்த அவர்கள், குடிபோதையில் இருந்ததால் ரகளை செய்துள்ளனர். தர்மபுரியில் இருந்து அதிகாலை நேரத்தில் சென்னைக்கு பஸ் இல்லாததால், அவர்கள் கிருஷ்ணகிரிக்கு செல்லும் பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் மற்றும் காவலர்களிடம் அத்துமீறி நடந்த பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்,’ என்றார்.