அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பகுதிகளில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். நெற்குன்றம் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து நேற்று சென்று சோதனை நடத்தியபோது ஒருவர் தான் வைத்திருந்த பையை போட்டுவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் விரட்டிச்சென்ற அந்த நபரை பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
இதில், அவர் நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி தனஞ்செழியன்(48) என்பது தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே கோயம்பேடு காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளார். இவர் மீது இரண்டு கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் கஞ்சா கடத்தல் உட்பட 17 வழக்குகள் உள்ளது. அரக்கோணம் பகுதியில் ஒரு கும்பலிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதை பொருளை வாங்கி வந்து சிறிய பாக்கெட்டில் அடைத்து கோயம்பேடு, நெற்குன்றம் பகுதிகளில் விற்பனை செய்துள்ளார். இவரிடம் இருந்து 50 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.