Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் கெடுபிடி என்பதால் மும்பையிலிருந்து ரயிலில் போதை மாத்திரை கடத்தி வந்து திருத்தணி, திருவள்ளூர் ரயில் நிலையங்களில் விற்பனை: 2 பேர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ரவுடி உள்பட 2 பேரை ரயிலில் வந்தபோது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கடந்த 2 நாட்களுக்கு முன் கோயம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், எஸ்ஐ யுவராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், மும்பையில் இருந்து 2 பேர் போதை மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி ரயில் மூலமாக வருகின்றனர். அவர்கள் சென்னைக்கு முன்பாக உள்ள ரயில் நிலையங்களில் இறங்கி, பின்னர் பஸ்கள் சென்னைக்கு வந்து போதை மாத்திரை விற்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன.

இந்நிலையில், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி கொண்டு ரயிலில் வரும் 2 பேர் திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் ரயில் நிலையங்களில் இறங்கி, அங்கு போதை மாத்திரைகளை பிரித்து கொண்டு தப்பி செல்ல இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் ரயில் நிலையங்களில் தனிப்படை போலீசார் மாறுவேடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மும்பையில் இருந்து திருத்தணிக்கு வந்த ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் யாரும் சிக்கவில்லை.

பின்னர் அரக்கோணம் வந்த மும்பை ரயிலில் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்துக்கு இடமாக வந்த 2 பேரை மடக்கி பிடித்து இன்று காலை கோயம்பேடு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிரமாக விசாரித்தனர். அவர்கள் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பிரகாஷ் (எ) சூர்யா (25) என்பதும், இவர் மீது கொலை, கஞ்சா உள்பட 10 வழக்குகளுடன் கோயம்பேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

இவர்களது கூட்டாளி ஆவடி பகுதியை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் மாதேஷ் (21) என்பதும், இவர் மீது 3 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பதில் சிக்கல் ஏற்பட்டது. எங்களை குறிவைத்து பிடிப்பதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு மாற்று வழியாக, மும்பைக்கு சென்று குறைந்த விலைக்கு போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

நாங்கள் போலீசில் பிடிபடாமல் இருப்பதற்காக போதை மாத்திரைகள் கேட்டவர்களை திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வரவழைத்து, அங்கேயே பிரித்து கொடுத்து விடுகிறோம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மாத்திரை ரூ.400 எனவும், மொத்தமாக வாங்குபவர்களுக்கு சலுகை விலையிலும் விற்பனை செய்துள்ளோம்’ என்றனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.