சென்னை: ரூ.769.97 கோடி செலவிலான சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்காக 68 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர். முக.ஸ்டாலின் இன்று (12.08.2024) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.461.69 கோடி செலவில் 3 பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.167.28 கோடி செலவில் 9 பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ரூ.109.58 கோடி செலவில் 79 பணிகள், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.28.42 கோடி செலவில் 11 பணிகள், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் ரூ.3 கோடி செலவில் 1 பணி என மொத்தம் ரூ.800.75 கோடி செலவிலான 104 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.1153.27 கோடி மதிப்பீட்டிலான 19 பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநகரத்தின் சார்பில் ரூ.35.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.3.46 கோடி மதிப்பீட்டிலான 1 பணி, என மொத்தம் ரூ.1192.45 கோடி மதிப்பீட்டிலான 30 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக நாகர்கோவில் மாநகராட்சியில் 3,20,000 மக்கள் பயனடையும் வகையில் ரூ.296.08 கோடி செலவிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம்;
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்தைச் சார்ந்த வேலகாபுரம் மற்றும் மாமண்டூர் ஊராட்சிகளிலுள்ள 4720 மக்கள் பயனடையும் வகையில் 10 குடியிருப்புகளுக்கான ரூ.3.18 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1.58 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 250 ஊரக குடியிருப்புகளுக்கான வைகை அணையை நீராதரமாகக் கொண்டு ரூ.162.43 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்; என மொத்தம் 461.69 கோடி ரூபாய் செலவில் 261 ஊரக குடியிருப்புகளுக்கான 3 குடிநீர்த் திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்.
புவியிடம் சார்ந்த தகவல் அமைப்பு மேலாண்மை மையம், சென்னைக் குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் 17 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் புவியிடம் சார்ந்த தகவல் அமைப்பு (GIS – Geographic Information System) மேலாண்மை மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னைக் குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளின் புவியிடம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதனை நிர்வகிக்க மேலாண்மை மையம் தலைமை அலுவலகத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள காணொளி திரை (Video wall) மூலம் இந்த கட்டமைப்பின் விவரங்களை வரைபடத்துடன் முழுமையாக பார்க்கவும், பராமரிப்பு பணிகள் விவரங்கள் மற்றும் புதிய குடிநீர், கழிவுநீர் கட்டமைப்பு பணிகளை குறிப்பில் (update) ஏற்றும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வரைபடங்களை எந்த இடத்தில் இருந்தும் பார்க்க முடியும். இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதோடு, இதன் பிரதி (copy) திருச்சியில் உள்ள தரவு மையத்தில் பாதுகாக்கப்படும். இவ்வரைபட விவரங்களை அவரவர் இடத்திலிருந்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் இம்மேலாண்மை மையத்தின் செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பின் மேலாண்மை வாயிலாக உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், திட்டமிடும் பணியின் செயல் திறனை மேம்படுத்தவும், தக்க முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்கவும் முடியும். இதன்மூலம் பொதுமக்களுக்கு துரிதமான சேவைகளை வழங்க இயலும். இம்மையத்தின் பயன்பாட்டிற்காக 5 நில அளவை கருவிகள் (DGPS – Differential Global Positioning System) மற்றும் 22 காந்தப்புல கண்டுபிடிப்பான் கருவிகள் (Magnetic Locators) வழங்கப்பட்டுள்ளன.
முடிவுற்ற குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள்
மாதவரம் பகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதிக்கு 2 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம், மணலி மண்டலம், சின்னச்சேக்காடு பகுதிக்கு 22 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப் பணிகள்; இராயபுரம் மண்டலம், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) கீழ் கூவம் ஆற்றின் கரையோரம் எழும்பூர் லாங்ஸ் கார்டனில் 27 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் பிரிவு – 2 கழிவுநீரிறைக்கும் நிலையத்திலிருந்து வில்லிவாக்கம் லகூன் கழிவுநீரிறைக்கும் நிலையம் வரை உள்ள 200 மி.மீ விட்டமுள்ள பழைய வார்ப்பிரும்பு குழாயை மாற்றி 2 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் 400 மி.மீ விட்டமுள்ள வார்ப்பிரும்பு குழாயாக விரிவுபடுத்தப்பட்ட பணிகள்; கோடம்பாக்கம் மண்டலம், நெசப்பாக்கத்தில், நாளொன்றுக்கு 54 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 40 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை 28 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் புதிய
தரக்குறியீடுகளுக்கு ஏற்ப புதுப்பித்து, புனரமைத்து, மேம்படுத்தப்பட்ட பணிகள்;
வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், ஜானகிராமன் காலனி பகுதிக்கு 17 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப் பணிகள்;ஆலந்தூர் மண்டலம், மணப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், பெல் நகர் மற்றும் பிள்ளையார் கோயில் தெரு பகுதிகளுக்கு 12 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்கள், கழிவுநீர் விசைக்குழாய்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்கள்; திருபெரும்புதூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு 35 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாள சாக்கடை திட்டம். என மொத்தம் 167 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவிலான 9 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாகத் துறையில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்
சேலம் மாநகராட்சியில் 5.60 கோடி ரூபாய் செலவில் 10 பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள், திருப்பூர் மாநகராட்சியில் 4.90 கோடி ரூபாய் செலவில் 14 பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியில் 1.40 கோடி ரூபாய் செலவில் பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்;திருப்பூர் மாநகராட்சியில் 2.10 கோடி ரூபாய் செலவில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், தூத்துக்குடி மாநகராட்சியில் 2.79 கோடி ரூபாய் செலவில் 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆற்காடு நகராட்சியில் 1.20 கோடி ரூபாய் செலவில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வந்தவாசி நகராட்சியில் 75 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்; சேலம் மாநகராட்சியில் 1.89 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட 6 பள்ளிக் கட்டடங்கள், உடுமலைப்பேட்டை, கோபிசெட்டிபாளையம், திருத்தணி, சத்தியமங்கலம் மற்றும் தென்காசி ஆகிய நகராட்சிகளில் 10.35 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 அறிவுசார் மையங்கள்;
சேலம் மாநகராட்சியில் 1.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 பொதுக்கழிப்பிடங்கள், வேலூர் மாநகராட்சியில் 35 லட்சம் ரூபாய் செலவிலும், பொள்ளாச்சி நகராட்சியில் 36 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 2 பொதுக்கழிப்பிடங்கள்; தாம்பரம் மாநகராட்சியில் 58 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்கள், ஆற்காடு, நரசிங்கபுரம், பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், மற்றும் துவாக்குடி ஆகிய நகராட்சிகளில் 1.78 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 பூங்காக்கள்; தூத்துக்குடி மாநகராட்சியில் 10.73 கோடி ரூபாய் செலவில் நீர்த்தேக்கத்தொட்டி, தாம்பரம் நகராட்சியில் 54 லட்சம் ரூபாய் செலவில் 2 நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் 16.22 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம்; காஞ்சிபுரம் மாநகராட்சியில் 7 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சந்தை, மேலூர் மற்றும் கூடலூர் (தேனி) ஆகிய நகராட்சிகளில் 9.76 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட 2 சந்தைகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் 2.86 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்;
செங்கல்பட்டு மண்டல அலுவலகத்திற்கு 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மண்டல அலுவலகக் கட்டடம், தாரமங்கலம் நகராட்சியில் 3.50 கோடி ரூபாய் செலவிலும், முசிறி நகராட்சியில் 3.50 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடங்கள், பொன்னேரி நகராட்சியில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலகக் கட்டடம், பழனி நகராட்சியில் 3.41 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்; சேலம் மாநகராட்சியில் 1.98 கோடி ரூபாய் செலவில் 2 சுற்றுச்சுவர்கள், 1.77 கோடி ரூபாய் செலவில் உபரிநீர் வெளியேற கால்வாய், 8.27 கோடி ரூபாய் செலவில் தெருவிளக்குகள், பொன்னேரி நகராட்சியில் 83 இலட்சம் ரூபாய் செலவில் 2 வளமீட்பு மையங்கள்; என மொத்தம் 109.58 கோடி ரூபாய் செலவிலான 79 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தல்
தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர் லூப் சாலையில் 14.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி; மணலி மண்டலம், தேவராஜ் தெருவிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, இராயபுரம் மண்டலம், ஆஞ்சநேயா நகர், பழைய ஆட்டுத்தொட்டி தெருவிலுள்ள தெலுங்கு ஆரம்பப் பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம், சாந்தோமிலுள்ள சென்னை நடுநிலைப்பள்ளி மற்றும் அண்ணாநகர் மண்டலம், அயனாவரம் பாலவாயல் தெருவிலுள்ள சென்னை ஆரம்பப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 8.66 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் பள்ளிக் கட்டடங்கள், மணலி மண்டலம், பொன்னுசாமி தெருவில் 29 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையக் கட்டடம்;
திருவொற்றியூர் மண்டலம், சுனாமி குடியிருப்பு மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், டி.என்.எச்.பி. சாலை ஆகிய பகுதிகளில் 1.98 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 புதிய விளையாட்டுத் திடல்கள், சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர், எழில் நகர் அணுகு சாலை மற்றும் டி.என்.எச்.பி. 1500 பிளாட்ஸ் பகுதிகளில் 1.67 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 புதிய பூங்காக்கள், சோழிங்கநல்லூர் மண்டலம், டி.என்.எச்.பி. E-36 சாலையில் 89 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்; என மொத்தம் ரூ.28.42 கோடி செலவில் முடிவுற்ற 11 திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் முடிவுற்ற திட்டப் பணியை திறந்து வைத்தல்
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பேரூராட்சியில் பணிபுரிந்து வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அங்காளம்மன் கோவில் வீதியில் 24 எண்ணிக்கையில் சுகாதார பணியாளர் குடியிருப்பு 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. அவ்விடத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு புதியதாக குடியிருப்புகள் கட்டுவதற்கு 2021-22-ஆம் ஆண்டு மூலதன மான்ய நிதியின் கீழ் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள 24 தூய்மைப் பணியாளர்களுக்கான குடியிருப்புக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். புதியதாக கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர் குடியிருப்பில் வரவேற்பரை, படுக்கையறை, சமையலறை மற்றும் கழிப்பிடத்துடன் கூடிய குளியலறை என 550 சதுரடியில் ஒரு குடியிருப்பு 6 வீடுகள் வீதம் நான்கு பகுதிகளாக மொத்தம் 24 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
அண்ணாநகர் மண்டலம், சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே இரயில்வே காலனி 3ஆவது தெருவையும், மாதா கோவில் தெருவையும் இணைக்கும் வகையில் 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம், அம்பத்தூரில் வார்டு-81 மற்றும் 85க்குட்பட்ட இரயில்வே சந்திக்கடவிற்கு மாற்றாக 11.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்லும் சுரங்கப்பாதை; அடையாறு மண்டலம், தொல்காப்பியப் பூங்காவில் பகுதி-1 மற்றும் பகுதி-2 இணைக்கும் வகையில் 9.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொங்கும் ஆகாய நடைபாலம், டி.ஜி.எஸ்.தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக 5.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வழி பெட்டகக் கால்வாய் (Triple Cell Box Culvert);
கிண்டி பாலம் சந்திப்பு முதல் சக்ரபாணி தெரு சந்திப்பு வரை உள்ள ரேஸ் கோர்ஸ் சாலையை 20.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுவடிமைப்பு செய்யும் பணி, பெசன்ட் நகர் கடற்கரை, காரல் ஸ்மித் நினைவகத்திற்கு அருகில் 1.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை, தண்டையார்பேட்டை மண்டலம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை (டோல்கேட் மெட்ரோ நிலையம் முதல் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் வரை) மற்றும் அருணாசலேஷ்வரர் கோவில் தெரு (புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையம் முதல் QQ திட்ட சாலை வரை) 64.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி கோவளம் வடிநிலப் பகுதியில் எம்.1. மற்றும் எம்.2 பாகங்களில் 666.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி,
உலகளாவிய சுற்றுச்சூழல் வசதித் திட்டத்தில் 58.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பினை மறுசீரமைக்கும் பணி; பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரை 259.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 364.63 கி.மீ. நீளத்திலான 2,089 சாலைகள் அமைக்கும் பணி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும நிதியில், மாதவரம் மண்டலத்தில் 38.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சி.எம்.டி.ஏ. கனரக மற்றும் இலகுரக வாகன நிறுத்த முனையம், சாலைகள் மற்றும் பல்நோக்குக் கட்டடங்கள் மேம்படுத்தும் பணி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட புலியூர் கால்வாய் (ட்ரஸ்ட்புரம் கால்வாய்) 16.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி; என மொத்தம் 1153.27 கோடி ரூபாய் மதிப்பிலான 19 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி நிர்வாகத் துறையில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
சேலம் மாநகராட்சியில் 5.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 4.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 பொருள் மீட்பு வசதி மையங்கள், 11.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமணி முத்தாறு கடைமடை கால்வாய் மறுசீரமைப்பு பணி, திருச்செங்கோடு நகராட்சியில் 4.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம், தாரமங்கலம் நகராட்சியில் 9.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்; என மொத்தம் 35.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்
அம்பத்தூர் மண்டலம், கொரட்டூர் TNHB காலனியில் 68-வது தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய குடிநீர் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்காக 68 புதிய வாகனங்களை வழங்குதல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர்களின் களப்பணிக்காக 1 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிலான 10 புதிய வாகனங்கள் (Bolero Jeep) மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 1 முதல் 15 மண்டலங்களின் பயன்பாட்டிற்காக 28 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவிலான 58 கழிவுநீரகற்று வாகனங்கள், என மொத்தம் 68 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நான்கு புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டதற்கான ஆணைகள் வழங்குதல்
திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நான்கு புதிய மாநகராட்சிகள் அமைத்துருவாக்கப்பட்டதற்கான ஆணைகளை முதலமைச்சர் அம்மாநகராட்சிகளின் மாமன்றத் தலைவர்களிடம் வழங்கினார்.
மூன்று புதிய நகராட்சிகளை உருவாக்குவதற்கான உத்தேச ஆணைகள் வெளியிடுதல்
திருப்பெரும்புதூர், மாமல்லபுரம் மற்றும் திருவையாறு ஆகிய 3 புதிய நகராட்சிகளை அமைத்துருவாக்குவதற்கான உத்தேச ஆணைகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குதல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 29 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 18 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 97 நபர்களுக்கும், என மொத்தம் 144 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் விதமாக, நகராட்சி நிருவாக இயக்குநகரத்தின் சார்பில் 20 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 3 நபர்களுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 4 நபர்களுக்கும், என மொத்தம் 27 நபர்களுக்கு முதலமைச்சர் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர். தயாநிதி மாறன், துணை மேயர். மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, இ.ஆ.ப., நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ். சிவராசு, இ.ஆ.ப., செயல் இயக்குநர் .செ.சரவணன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.