சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டு 6,000 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், இந்த ஆண்டு 16,490 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 206 தொடக்க பள்ளிகள், 130 நடுநிலைப்பள்ளிகள், 46 உயர்நிலைபள்ளிகள், 35 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 1 லட்சத்திற்க்கும் அதிகமாக மாணவர்கள் படித்து வரும் சூழலில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025-26-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஏற்கனவே மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மாலை வேலையில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. மணவர்களின் மதிப்பெண்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தவிர மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டுப்போட்டிகளுக்கான முக்கியத்துவம் அளித்து பல்வேறு போட்டிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
படிப்புத்திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டத்தன் விளைவாக மாநகராட்சி பள்ளிகளில் இந்த ஆண்டு மொத்தமாக 16,490 மாணவர்கள் சேர்ந்துள்ளன. இன்று பள்ளிகள் திறக்கபட்டுள்ள நிலையில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என்பதால் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் அதிகபட்சமாக LKG, UKG-யில் மட்டும் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.