சென்னை: சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள 5 பேரின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நீலாங்கரையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங் உள்ளிட்ட 5 பேருக்கு சொந்தமான நிலம் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் உள்ளது.
அந்த நிலம் தொடர்பாக சாலமன் செல்வராஜ் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டா பெற்றுள்ளார். இதை அறிந்த மூத்த பத்திரிக்கையாளர் பகவான் சிங் தாம்பரம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நிலம் மோசடி புகார் அளித்தார். தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நில மோசடி துணை ஆணையாளர் சுப்புலட்சுமி மேற்பார்வையில் ஆய்வாளர் சிவகுமார் விசாரணையை நடத்தினார்.
விசாரணையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுரேஷ்குமார் அவரது மனைவி கிளாரா பெப்ஸி ஆகியோர் பெயரில் போலியாக ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை அடுத்து அந்த ஆவணத்தின் பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் சுரேஷ்குமார், கிளாரா பெப்ஸி தம்பதியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.