வேலூர்: சென்னை பீச்-காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ ரயில்’ சோதனை ஓட்டம் நாளை நடக்கிறது.நாடு முழுவதும் குறிப்பிட்ட மார்க்கங்களில் கடந்த 2019ம் ஆண்டு வந்தே பாரத் ரயில் விடப்பட்டது. தற்போது மும்பை-புனே, சென்னை-மைசூரு, டெல்லி-அகமதாபாத் என முக்கிய வழித்தடங்களில் 60 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சில மார்க்கங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதேபோல், 250 கி.மீ தூரத்துக்குள் உள்ள முக்கிய இரண்டு நகரங்களுக்கு இடையே கல்வி, வேலை நிமித்தம் காரணமாக அன்றாடம் பயணிக்கும் மக்களுக்காக வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை-திருப்பதி, சென்னை பீச்-காட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ரயில் பெட்டிகள் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உருவாக்கப்பட்டுள்ளன.
இது தற்போது இயக்கப்படும் மெமு ரயில்கள் போலவே, அதேநேரத்தில் வந்தே பாரத் ரயில்களை போன்ற கட்டமைப்புடன் இயங்கும். இந்த ரயிலில் 100 பேர் வரை அமர்ந்து செல்லவும், 200 பேர் வரை நின்று செல்லவும் முடியும். மொத்தம் 12 பெட்டிகளுடன் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இந்த ரயில் இயங்கும். தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள், நவீன பசுமை கழிவறைகள், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் ஆகியவற்றுடன் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாளை (3ம் தேதி) காலை சென்னை வில்லிவாக்கம் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை வளாகத்தில் இருந்து 8.15 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு சென்னை பீச் வரும் வந்தே பாரத் மெட்ரோ ரயில் அங்கிருந்து காலை 9.30 மணிக்கு காட்பாடி நோக்கி புறப்படுகிறது. ராயபுரம், பெரம்பூர் வழியாக காலை 10.10 மணியளவில் வில்லிவாக்கம் நடைமேடைக்கு வரும் இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் ஜனக்குமார் கர்க் அவருக்கான கண்காணிப்பு பெட்டியில் வருகிறார்.
தொடர்ந்து காலை 10.15 மணிக்கு அங்கிருந்து புறப்படும் வந்தே மெட்ரோ ரயில் 11 மணிக்கு அரக்கோணம் சந்திப்பு வந்தடைகிறது. அங்கிருந்து 11.05 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு வருகிறது. அங்கிருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை பீச் சென்றடைகிறது.மேலும் இந்த ரயிலை வருங்காலத்தில் 180 கி.மீ வேகத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ள தென்னக ரயில்வே, அடுத்ததாக சென்னை-திருப்பதி இடையேயும், அதை தொடர்ந்து 180 நகரங்களை இணைக்கும் வகையிலான வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.