சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு சட்டவிரோதமாக விமானத்தில் கடத்தி வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாசனை திரவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை தலைநகர் கொழுப்பில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்துள்ளது. அதில் வந்த 2 பயணிகளின் சூட்கேசில் இருந்து அதிகப்படியான நறுமணம் வீசியுள்ளது. அவர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போதும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களின் சூட்கேஸை சோதனை செய்தனர்.
அவற்றில் சுமார் 20 பார்சல்களில் 20 கிலோ அகில் மரக்கட்டைகள் இருந்துள்ளன. இவை சந்தனத்தை விட அதிக நறுமணம் கொண்டவை. மேலும் அகில் மரத்தின் பிஸிலில் இருந்து தயாரிக்கப்படும் அகர் அத்தர் எண்ணெய் 15க்கும் மேற்பட்ட பாட்டில்களில் இருந்தது தெரியவந்தது. இந்த மரத்தை வீடுகளில் வளர்ப்பது சர்வதேச வனபாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். விலை உயர்ந்த நறுமண பொருட்களை எடுத்து வருவதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். அவற்றை கடத்தி வந்த 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.