சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,565-க்கும் சவரன் ரூ.52,520-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. தொடர்ந்து அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் தாக்கத்தால் தங்கம் விலை எப்படி ஏறியதோ அதே வேகத்தில் குறைந்ததை காண முடிந்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.
தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக உயர்வைக் கண்டு வந்த தங்கம், குறையும்போது மட்டும் சிறிதளவு குறைவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,520-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,565-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆடி மாதத்தில் பெரும்பாலும் திருமணங்கள் நடப்பதில்லை. ஆடி மாதம் வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து ஆவணி மாதம் பிறக்க உள்ளது. ஆவணி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிகளவில் நடைபெறும். இந்த நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வருவது விசேஷங்களுக்காக நகை வாங்க காத்திருப்போருக்கு கூடுதல் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது.