பூந்தமல்லி: சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் தங்கம், போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்த ஏஐயூ எனப்படும் ஏர் இன்டெலிஜென்ட் யூனிட் அதிகாரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய் ஸ்குவாஸ்ட் அதிக அளவில் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தங்கம் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 267 கிலோ கடத்தல் தங்கம், சுங்க சோதனைகள் இல்லாமல் வெளியில் எடுத்துச்சென்று இருந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் சென்னை விமான நிலையத்திற்குள் பரிசு பொருட்கள் விற்பனை கடையை நடத்தி வந்த கடை உரிமையாளர், கடையில் பணியாற்றும் ஊழியர்கள் 7 பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒரு கடத்தல் பயணி உள்பட 9 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது சம்பந்தமாக இதுவரையில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அந்த கடத்தல் தங்கத்தில் ஒரு கிலோவை கூட இன்றுவரை சுங்க அதிகாரிகளோ, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளோ மீண்டும் பறிமுதல் செய்யவில்லை.
இந்நிலையில், தற்போது இதுபோன்ற கடத்தல் சம்பவங்களை கண்டுபிடிப்பதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையின் ஏ.ஐ.யூ. பிரிவில், ஏர் இன்டெலிஜென்ட் யூனிட் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக துணை, உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏர் இன்டெலிஜென்ட் யூனிட் பிரிவில், இதுவரையில் ஒரு துணை ஆணையர் மற்றும் ஒரு உதவி ஆணையர் மட்டுமே பணியில் இருந்தனர். இப்போது 2 துணை ஆணையர்கள் மற்றும் ஒரு உதவி ஆணையர் என 3 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த ஏர் இன்டெலிஜென்ட் யூனிட் அதிகாரிகள், சுங்கத்துறை சீருடைகள் அணியாமல் சாதாரண உடைகளில் பயணிகளைப் போல், இருந்து கொண்டு விமான பயணிகளை கண்காணிப்பார்கள். இவர்கள் விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதில் இருந்து அவர்கள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, வெளி கேட் செல்லும் வரையில் தொடர்ச்சியாக கண்காணிப்பார்கள். அப்போது சந்தேகத்துக்கிடமான பயணிகளை நிறுத்தி விசாரணை நடத்தி, சோதனை நடத்தும் அதிகாரம் இந்த ஏர் இன்டெலிஜென்ட் யூனிட்டுக்கு உள்ளது. மேலும் இந்த 3 ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளில் ஒருவர் பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தற்போது, போதை கடத்தலும் அதிகரித்து வருவதால் போதைப் பொருட்கள் கடத்தல் பயணிகளை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு சுங்கத்துறையின் மோப்ப நாய்களை அதிக அளவில் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக மோப்ப நாய் ஸ்குவாட், ஏர் இன்டெலிஜென்ட் யூனிட் பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் செயல்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது தங்கம், போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவங்களில், ஆண்களுக்கு சமமாக பெண் பயணிகளும் அதிகமாக ஈடுபடுகின்றனர் என்பதால், சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் பெண் சுங்க அதிகாரிகள், 3 உதவி ஆணையர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதோடு சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு துணை ஆணையர் ஒருவர், உதவி ஆணையர்கள் 5 பேர் என மொத்தம் 6 புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால், சென்னை விமான நிலையத்தில் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் பயணிகள் பெருமளவு சிக்குவார்கள் என்று சுங்கத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.