சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு இரவு 8.30 மணிக்கு வந்தார். விமானநிலையத்தில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் எம்பி ஜெகத்ரட்சகன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அவருக்கு சால்வை, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:
அரசுப் பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்து விட்டு, வருகிற செப்டம்பர் 14 அன்று திரும்பி வருகிற மாதிரி என்னுடைய பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. மூன்றாண்டு காலத்தில் இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி இதன் மூலமாக, 18 லட்சத்து 89 ஆயிரத்து 234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நம்முடைய இலக்கு விரைவாக எட்டப்படும்
அமெரிக்கா சென்று வந்தபிறகு அமைச்சரவையில் ஏதாவது மாற்றம் இருக்குமா?
மாறுதல் ஒன்று தான் மாறாதது. Wait and see.
அமைச்சர் துரைமுருகன், ரஜினிகாந்த் விவகாரம் குறித்து நீங்கள் என்ன சார் சொல்கிறீர்கள்?
இரண்டு பேரும் நீண்டகால நண்பர்கள். நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இந்த அமெரிக்கப் பயணத்தில் குறிப்பிட்ட இலக்கை முதலீடுகளாக நிர்ணயித்து இந்தப் பயணம் மேற்கொள்கிறீர்களா? 43 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் முதல்வர் சிகாகோ மாநாட்டில் தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். 43 ஆண்டுகளுக்கு பிறகு நீங்களும் தமிழர்களை சந்தித்துப் பேச இருக்கிறீர்கள். அது எத்தகைய மகிழ்ச்சியை உங்களுக்குத் தருகிறது?
போகின்ற காரியம் நிச்சயமாக வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதலீட்டாளர்களை பொறுத்தவரை போட்டிப்போட்டுக் கொண்டு என்னைச் சந்திக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு நாங்கள் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று நேரம் கேட்டிருக்கிறார்கள். இப்போது நான் கொடுத்திருக்கின்ற நாட்களே போதாது என்று கருதுகிறேன். போகின்ற காரியம் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதலீட்டை ஈர்ப்பதற்காக மகிழ்ச்சியோடு செல்கிறேன், உறுதியோடு செல்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.