சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு 11வது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில், முகவரி இல்லாத, இ-மெயில் வந்தது. அதில் சென்னையில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பரபரப்படைந்த விமான நிலைய அதிகாரிகள், சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சென்னையில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, நேரடி விமானம் இல்லை. ஆனால் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் துபாய் வழியாக சான்பிரான்சிஸ்கோ செல்ல இருக்கிறார் என்று தெரியவந்தது. எனவே முதல்வர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மர்ம இ-மெயில் புரளியாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதினர்.வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக சோதனைகளையும் நடத்தினர். முதல்வர் விமானத்தில் ஏறிய பின்பு, இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட வேண்டிய அந்த விமானம், 16 நிமிடங்கள் தாமதமாக இரவு 10.16 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டு சென்றது.
இதையடுத்து, விமான நிலைய போலீசாரும், விமான நிலைய பாதுகாப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
இதற்கிடையே சென்னை விமான நிலைய போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்துக்கு, கடந்த 2 மாதங்களில் ஏற்கனவே இதேபோல் 10 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில், தற்போது 11வது முறையாக, அதுவும் முதல்வர் பயணம் செய்யும் விமானத்தை குறிப்பிட்டு, இதுபோன்ற மிரட்டல் வந்திருப்பது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் மிரட்டல் விடுத்த சமூக விரோதிகளை கூண்டோடு பிடிப்பதற்காக, தனிப்படை ஒன்றை அமைத்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிராஞ்ச் உதவியுடன் அடுத்த சில தினங்களில் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து, பெரும் பீதி பரபரப்புகளை ஏற்படுத்தி வரும் சமூக விரோதிகளை கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.