சென்னை: சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை உணவகமான உதான் யாத்ரி கபே திட்டத்தை ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தா விமான நிலையத்தில் முதலில் தொடங்கப்பட்டது. இப்போது 2வதாக சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் காபி, டீ 10 ரூபாய், தண்ணீர் பாட்டில் ரூ.10, சமோசா ரூ.20, ஸ்வீட் ரூ.20 என்று விற்பனை செய்யப்படுகிறது.
பின்னர் ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விமான சேவையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் உதான் விமான சேவை தொடங்கப்பட்டது. இப்போது இந்தியா முழுவதும் 619 வழித்தடங்களில் உதான் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் 1.57 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் நான்காவது பெரிய விமான நிலையமாக சென்னை விளங்குகிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் தனியார்மயமாக்கப்படும்போது, அதில் பல்வேறு முன்னேற்றங்கள் இருப்பதாக தெரிகிறது. சென்னை விமான நிலையத்தில் 2.2 கோடி மக்கள் இப்போது பயணித்துக் கொண்டு இருக்கின்றனர். அது 3.5 கோடியாக அதிகரிக்க உள்ளது.
கோவை விமான நிலையம் அதிக அளவு பயணிகள் பயன்படுத்தும் விமான நிலையமாக உள்ளது. அதை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். சென்னையைப் பொறுத்தமட்டில் இரண்டாவது விமான நிலையம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளான இடங்கள் தேர்வு செய்வது முடிவடைந்துள்ளன. தமிழ்நாட்டில் உதான் திட்டத்தில் நெய்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து விமான சேவைகள் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளன. இதில் சேலம்- சென்னை இடையே ஏற்கனவே விமான சேவைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்ததாக வேலூர் -சென்னை இடையே விமான சேவைகள் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. இவ்வாறு ஒன்றிய அமைச்சர் கூறினார்.