சென்னை: துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சென்னைக்கு விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, துபாயில் இருந்து சென்னை வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த ஒரு பயணியும், அபுதாபியில் இருந்து சென்னை வர டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த மற்றொரு பயணியும், டிக்கெட் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டு, துபாய், அபுதாபியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானங்களில் டிக்கெட்டுகள் மாற்றப்பட்டு இருந்தன.
இந்த 2 பயணிகளும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சென்னை வராமல் பெங்களூருக்கு செல்வது ஏன் என மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ரகசியமாக விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்கம் கடத்தி வருவதாகவும், அதிகாரிகள் மோப்பம் பிடித்து, சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை கைப்பற்ற தயார் நிலையில் இருந்ததையும் தெரிந்து, அவர்கள் டிக்கெட்களை பெங்களூரு விமானத்திற்கு மாற்றியுள்ளது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, புலனாய்வுத் துறையின் தனிப்படையினர், சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூருக்கு விரைந்தனர். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு இரண்டு தனியார் பயணிகள் விமானங்கள் வந்து தரையிறங்கின.அதில் வந்த பயணிகளை சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த 2 சென்னை பயணிகள் வெளியில் வந்தனர். அவர்களை மடக்கிப்பிடித்த அதிகாரிகள், தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர்.
அவர்களது உள்ளாடைகள் மற்றும் உடலில் கால்களில் போடப்பட்டிருந்த பேண்ட் எய்ட் உரைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப் பசைகளை கைப்பற்றினர். 7.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.5.2 கோடி. தொடர்ந்து, சென்னை பயணிகள் இரண்டு பேரையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணையில், பெங்களூருவில் சிக்கிய கடத்தல் குருவிகள் இருவரும் துபாய், அபுதாபியில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இவர்களை தங்கம் கடத்தும் கும்பல் சந்தித்து பேசி, கடத்தல் குருவிகளாக மாற்றி உள்ளனர். அதற்காக இருவருக்கும் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் எனப்படும் முதல் வகுப்பு விமான டிக்கெட்டுகளை கடத்தல் கும்பல் எடுத்துக் கொடுத்துள்ளது.
அதோடு இருவரும் விமானத்தை விட்டு இறங்கி ஓய்வு எடுப்பதற்காக, பெங்களூரு விமான நிலையம் அருகே நட்சத்திர ஓட்டலில் ரூம் முன்பதிவு செய்து இருந்தனர். இவர்கள் இருவரும் அந்த ரூமுக்கு சென்று ஓய்வு எடுக்கும்போது, சென்னையைச் சேர்ந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர், நட்சத்திர ஓட்டலுக்கு சென்று குருவிகள் கொண்டு வந்துள்ள கடத்தல் தங்கத்தை வாங்கிக் கொண்டு, பெங்களூருவில் இருந்து கார் மூலம் சென்னைக்கு கொண்டு வர திட்டமிட்டதும் தெரியவந்தது.
* நட்சத்திர ஓட்டலில் 4 பேர் சிக்கினர்
மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டலுக்கு சென்று அங்கு அறையில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். பிறகு துபாய், அபுதாபியில் இருந்து தங்கம் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த கடத்தல் குருவிகள் என 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, இவர்களை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்து வருவதற்கும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.