சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் எல்லையில் 1,524 சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகள் காவல்துறை அனுமதி வழங்கிய சாலைகளான 17 வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சிலைகளை கரைக்க இன்று காலை 10 மணி முதல் பல்வேறு இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
விநாயகர் ஊர்வலத்தின் போது எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை எடுத்து செல்ல போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 16,500 காவலர்கள் மற்றும் 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.