Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.1.24 கோடி அபராதம்

சென்னை, ஜூலை 15: சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1.24 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியில் உள்ள 11 நவீன காப்பகங்களை பயன்படுத்திக் கொள்ள உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் கால்நடை காப்பகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கால்நடை காப்பகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2024ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, சுமார் 22,875 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான மாடுகள் உரிய இடவசதி இன்றி, தொழுவங்களுக்குள் வைத்து பராமரிக்கப்படாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு, பொது சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சில நேரங்களில் பொதுமக்கள் மாடுகளால் தாக்கப்படும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு தெருக்களில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மாடு பிடிக்கும் வாகனம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிடிக்கப்படும் மாடுகள் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு மீண்டும் சாலைகளில் விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அந்த மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 2,718 எண்ணிக்கையிலான மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,24,03,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை முறையாகப் பராமரித்திடவும், பாதசாரிகள் மற்றும் வாகனத்தில் செல்வோருக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், கால்நடை வளர்ப்போர்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையிலும் சேவை மனப்பான்மையுடன் 1 முதல் 15 வரை உள்ள மண்டலங்களில் 18 இடங்களில் மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்படும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் தற்போது 11 நவீன மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு, அதில் 980 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கால்நடை காப்பகங்களில் கால்நடை மருத்துவர் அறை, பராமரிப்பாளர் அறை, கட்டுப்பாட்டு அறை, மருந்துகள் வைப்பு அறை, கண்காணிப்புக் கேமராக்கள், மின் வசதி, மின் விசிறி வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கால்நடைக்கு நாளொன்றுக்கு ரூ.10 பராமரிப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மாடுகளின் உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தங்கள் மாடுகளை சாலைகளில் சுற்றித்திரிய விடாமல், மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கால்நடை காப்பகங்களில் தங்கள் மாடுகளை வைத்துப் பராமரித்திடவும், மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.