செங்கம் : செங்கம் அருகே சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ரூ.3 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோர் வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமை தாங்கினார். டிஆர்ஓ ராமபிரதீபன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோர் செங்கம் அடுத்த பரமனந்தல், குப்பநத்தம் மற்றும் ஜவ்வாதுமலை ஒன்றியம் கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சாரத்துறை, மகளிர் திட்டம், மருத்துவத்துறை, கால்நடைத்துறை, காவல் துறை, வனத்துறை உட்பட பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அரங்குகளை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
முன்னதாக எம்எல்ஏ மு.பெ.கிரி பேசுகையில், திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் பெண்கள் மற்றும் விவசாயிகள், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது கூரை வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக அமைக்க வேண்டும் என அனைவருக்கும் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது.
அதேவழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் 100 சதவீதம் நிறைவேற்றி பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை என வரலாறு போற்றக்கூடிய திட்டங்கள் அறிவித்து நடைமுறைப்படுத்தி இந்தியாவின் தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார் என்றார்.
தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் கல்வித்துறைக்கு என சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்தால் மற்றும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடை, சைக்கிள் வழங்கப்பட்டு பயன்பெறுகின்றனர்.
திருவண்ணாமலையில் மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து துறைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு துறை சார்ந்த அதிகாரிகள் தேடிதேடி சென்று மக்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் செங்கம் வட்டாட்சியர் முருகன், மண்டல துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு, ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி குமார், ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமஜெயம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமநாதன், காமாட்சி கண்ணன், சிவானந்தம், கோவிந்தராஜ், ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.