செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தொடர் மழை காரணமாக, அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமான சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி தொடர் மழை பெய்து வருகிறது. இதேபோல் நகர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, செங்கல்பட்டு அருகே மேலமையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேங்கியதில் சேதமாகி, தற்போது குண்டும் குழியுமாக மாறி பரிதாபமாக காட்சியளிக்கிறது.
குறிப்பாக, மேலமையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அக்ஷயா நகர் அருகே லேக் வியூ அவென்யூவில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால், அவை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மேலும், இந்த சாலை தற்போதைய தொடர் மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அவ்வழியே நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல், செங்கல்பட்டு நகரம் மற்றும் தாலுகா பகுதிகளில் அனைத்து குடியிருப்பு பகுதி சாலைகளும் மழையால் பலத்த சேதமாகி குண்டும் குழியுமாக மாறி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
எனவே, செங்கல்பட்டு நகரம் மற்றும் தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக தரமான முறையில் சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர், ஊராட்சி, ஒன்றிய மற்றும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.