சென்னை: செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை அமைக்கும் பணி நடந்ததால் நேற்று அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி முதல் புலிப்பாக்கம் வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
அதனால், திருச்சியில் இருந்து சென்னை வரும் வாகனங்களும் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களும் ஒரே பாதையில் செல்வதால், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்லவேண்டிய இடத்திற்கு செல்லமுடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் கார், ஆம்னி தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ஆட்டோ, வேன், இருசக்கர வாகனம் என அனைத்து வாகனங்களும் ஆமைவேகத்தில் சென்றன.