செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்த குமாரவாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி மகள் பவித்ரா (21). இவர் செங்கல்பட்டு நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த காவணிப்பாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த தேவன் என்பவரின் மகன் லிங்கேஸ்வரன் (24). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பவித்ராவின் அக்கா நிச்சயதார்த்த விழாவில் லிங்கேஸ்வரனும், பவித்ராவும் முதன்முதலில் சந்தித்து உள்ளனர். அதன்பிறகு தொலைபேசியில் பேசி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலை வளர்த்து வந்துள்ளனர். இதை அறிந்த பவித்ராவின் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் திருமணம் செய்துவிட்டு, பாதுகாப்பு வழங்க கோரி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதை தொடர்ந்து லிங்கேஸ்வரன் வீட்டிற்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு வழங்க கோரி தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பவித்ரா வீட்டின் பெற்றோர், உறவினர்கள் இரு தரப்பு வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் குவிந்ததால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.