Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை அமைகிறது: ரூ.700 கோடி முதலீடு; 1000 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஜப்பானை சேர்ந்த கோகி ஹோல்டிங்-ன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் உள்ள தொழிற் பூங்காவில், ரூ.700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் சுமார் 1000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகளாவிய நிறுவனமான கோகி ஹோல்டிங் ஜப்பான், ஜெர்மனி, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டுள்ள அதன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15-க்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்கள், 500க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சேவை மையங்களுடன் விரிவான வலையமைப்பை கொண்டுள்ளது.

ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் அமைந்துள்ள தொழிற் பூங்காவில், ரூ.700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் இன்றையதினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், கோகி குழுமத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அலுவலர் பிரதாப் தெய்வநாயகம், கோகி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியன் கோதண்டராமன், உற்பத்தி திட்டத்தின் தலைவர் தமிழரசன் கலைவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.