செங்கல்பட்டு: மின்சாரம் தாக்கி பலியான குடும்பத்திற்கு நிதியுதவியை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திருக்கழுக்குன்றம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் மின் விபத்து ஏற்பட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம் சார்பாக இழப்பீட்டுத் தொகையாக ₹5 லட்சத்திற்கான காசோலையினை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி முன்னிலையில் கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். அப்போது, திருக்கழுக்குன்றம் மின் உபகோட்ட மேற்பார்வை பொறியாளர் பொன்.அருணாசலம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 22.6.2023 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தனசேகர் என்பவரது பசுமாடு மின்சாரம் பாய்ந்து இறந்தது தொடர்பாக மனு அளித்தார். அதன்பேரில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம் சார்பாக, இழப்பீட்டுத் தொகையாக ₹25 ஆயிரத்திற்கான காசோலையினை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி முன்னிலையில், கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.