செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ரூ.517.21 லட்சம் மதிப்பில் சிறுபாசன ஏரிகள் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயார் பகுதியில் ஏரியை தூர்வாரி சீரமைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளை தூர்வாரி, அங்கு மழைநீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, அனைத்து பகுதிகளிலும் சிறுபாசன ஏரிகளை இயந்திரங்கள் மூலம் தூர்வாருதல், ஆழப்படுத்துதல், உபரி நீர்போக்கி (கலங்கல்), மதகு போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் பழுதுபார்த்தல், புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 588 சிறுபாசன ஏரிகளில், 64 சிறுபான ஏரிகளில் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ), சமூக நிறுவனங்கள் (சிபிஓ), பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதி மற்றும் கல்வி நிறுவன நிதி மூலம் ரூ.517.21 லட்சம் மதிப்பில் சிறுபாசன ஏரி குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 16 சிறுபாசன ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
மேலும், 43 சிறுபாசன ஏரிகளில் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ), சமூக நிறுவனங்கள் (சிபிஓ), பெருநிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதி மற்றும் கல்வி நிறுவன நிதி மூலம் நடப்பாண்டில் ரூ.711.92 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காயார் ஏரியில் தூர்வாரும் பணிகள் நடந்து முடிந்தன. இதனால் அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவை நிறைவு பெற்றுள்ளது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினருக்கும் அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.