செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ரசாயனம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி 2 பேர் உயிரிழந்தனர். பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு டேங்கர் லாரி ஒன்று ஆசிட் ஏற்றி வந்துக்கொண்டிருந்தது. இந்த லாரி இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தது. அதே நேரத்தில், மிதிவண்டியில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, லாரி எதிர்பாராதவிதமாக மிதிவண்டி மீது மோதியதுடன் தடுப்பு சுவற்றில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. மேலும் லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறியது.
இந்த விபத்தில் மிதிவண்டியில் வந்த வாயலூர் பகுதியைச் சேர்ந்த துரை மற்றும் வெளியூரை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாரியில் இருந்து வெளியேறி வரும் ரசாயனத்தை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறுவதால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.