செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சட்டவிரோதமாக ஏரி மண் வாங்கி, வயல்வெளியில் கொட்டிய பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். எனினும், சட்டவிரோதமாக ஏரி மண்ணை விற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், மண்ணை வாங்கியவரை மட்டும் கைது செய்து போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர் என்று கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, நேதாஜி நகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு, செங்கல்பட்டு அருகே பொன்விளைந்த களத்தூர் பகுதி ஏரியிலிருந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் ஒரு தனியார் நிறுவனம் மண் எடுத்து வருகிறது.
இந்த மண்ணை, அப்பகுதியை சேர்ந்த ஒன்றிய பெண் கவுன்சிலர் வாங்கி, தனது வயல்களில் கொட்டி வந்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசார், வயலில் ஏரி மண்ணுடன் நின்றிருந்த 2 ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக ஏரி மண்ணை வாங்கியதாக ஒன்றிய பெண் கவுன்சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து கிராம மக்களும் ஒன்றிய பெண் கவுன்சிலரின் உறவினர்களும் கூறுகையில், பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் கடந்த 3 நாட்களாக பலர் ஏரிமண்ணை சட்டவிரோதமாக வாங்கி குவித்து வருகின்றனர். எனினும், போலீசார், ஒன்றிய பெண் கவுன்சிலரை மட்டும் கைது செய்துள்ளனர். இவ்விஷயத்தில் ஏரி மண்ணை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர்களை விட்டுவிட்டு, வாங்கியவரை மட்டும் கைது செய்தது ஒருதலைபட்சமான நடவடிக்கை. இதுபற்றி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.