Thursday, June 19, 2025
Home செய்திகள்Showinpage உலகத்தின் உயரமான செனாப் ரயில்வே பாலம்: வரலாற்று சாதனை படைத்த இந்திய இன்ஜினியர்கள்

உலகத்தின் உயரமான செனாப் ரயில்வே பாலம்: வரலாற்று சாதனை படைத்த இந்திய இன்ஜினியர்கள்

by Neethimaan

உதம்பூர் -ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை மொத்த தூரம் 272 கிமீ
1315 மீட்டர் நீளம்
திட்டச்செலவு ரூ.43780 கோடி
சுரங்கபாதைகள் 36
நீளம் 110கிமீ
பாலங்கள் 943
ரூ. 2,500கோடி மதிப்பீட்டில் துவங்கியது
ரூ. 43,780 கோடியில் முடிந்தது

1983 வரை ஜம்மு வரைதான் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகருக்கு ரயில்பாதை கிடையாது. 1983ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வழியாக பாரமுல்லாவுக்கு 324 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை அறிவித்து அதன் முதல் கட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் இந்த திட்டத்தால் அம்மாநிலம் வளர்ச்சி பெறும் என்று கூறப்பட்டது. ஆனால், பனி மலைகள், காடுகள், குறுக்கே ஓடும் வற்றாத ஜீவ நதிகள் என பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே திட்டப்பணிகள் மிகவும் மெதுவாக நடந்தது. விளைவு, ஜம்முவில் இருந்து 54 கி.மீ தூரத்துக்கு ரயில்பாதை அமைக்கவே 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2005ல் ஜம்மு- உதம்பூர் ரயில் பாதையை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

அதே நேரத்தில் வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதியில் இருந்தும் ரயில் பாதை அமைக்கும் பணி நடந்தது. பாரமுல்லாவில் இருந்து பனிஹால் வரை 135 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த 2013ல் திறக்கப்பட்டது. மூன்றாவது கட்டமாக கடந்த 2014 ஜூலையில் உதம்பூரில் இருந்து கத்ரா வரையிலான 25 கிமீ தூரத்துக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. பனிஹாலில் இருந்து சங்கல்தான் வரையிலான 49 கிமீ தூர ரயில் பாதையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கி வைத்தார். எஞ்சியிருந்தது கத்ரா- சங்கல்தான் இடையிலான 64 கிமீ பாதை மட்டும்தான். ஆனால், இங்குதான் ரயில்வே கடும் சவால்களை சந்தித்தது. குறுக்கே ஓடிய செனாப் நதியில் பாலம் கட்டுவது ரயில்வே இன்ஜினியர்களுக்கு கடும் சவாலாக இருந்தது. ஏனென்றால் அவ்வளவு உயர ரயில்வே பாலத்தை உலகிலேயே எந்த நாடும் அமைத்ததில்லை. ஆனால், இந்திய இன்ஜினியர்கள் தங்கள் திறமையால் டேக்லா என்ற அதிநவீன மென்பொருளை பயன்படுத்தி பாலத்தை வடிவமைத்தனர்.

1315 மீட்டர் நீள ரயில்வே பால திட்டத்தை திறம்பட நிறைவேற்றினர். 2017ல் துவங்கிய கட்டுமான பணி கடந்த 2022ல் முடிவடைந்தது. அதன் பிறகு ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ரயில்கள் சோதனை முறையில் அந்த பாலத்தில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பாலம் செனாப் ஆற்று படுகையில் இருந்து 359 மீட்டர் 1178 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதுதான் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் டவரைவிட 35 மீட்டர்( 115 அடி) அதிக உயரம் கொண்டது. டெல்லியில் உள்ள குதுப் மினாரைவிட 5 மடங்கு அதிக உயரம் கொண்டது.
இது மட்டுமல்ல, மைனஸ் 10 டிகிரி குளிர் முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை தாங்க கூடியது. மொத்தம் ரூ.1486 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள். 266 கிமீ வேகத்தில் பனிக்காற்று வீசினாலும் தாங்கும் அளவுக்கு இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்வே பாலத்தையும் ரயில் திட்டத்தையும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், அதை தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூர் காரணமாக திறப்பு விழா தாமதமானது. இந்நிலையில், இன்று பிரதமர் மோடி ரயில் இணைப்பு திட்டங்களை தொடங்கி வைக்க காஷ்மீர் செல்கிறார். இப்பயணத்தில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா வரை 272 கிமீ ரயில் இணைப்பின் முக்கிய பகுதியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கட்டிடக்கலையின் அற்புதமான உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கத்ரா முதல் பாரமுல்லா வரையிலான வந்தே பாரத் ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இப்பாலத்தின் வழியாக பயணிக்கும் கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும். இனி வரும் காலங்களில் நாட்டின் தென்எல்லையான கன்னியாகுமரியில் இருந்து வடக்கு எல்லையான ஸ்ரீநகர், பாரமுல்லாவுக்கு ரயிலிலேயே பயணம் செய்யலாம்.

மற்றொரு அதிசய பாலம்
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கேபிள் தாங்கு ரயில் பாலமும், உதம்பூர்- பாரமுல்லா ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிசய பாலத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கத்ராவுக்கும் ரியாசிக்கும் இடையே செனாப் நிதியின் கிளை ஆறான அஞ்சியின் குறுக்கேதான் இந்த கேபிள் தாங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் 2 சுரங்கங்களை இணைக்கிறது. வழக்கமான கட்டுமானத்துக்கு பதிலாக பாலத்தின் பாரத்தை கேபிள்கள்(இரும்பு வடம்) தாங்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலமும் செனாப் பாலத்துக்கு சளைத்ததில்லை. 725 மீட்டர் நீளம் கொண்ட கொண்ட இந்த பாலம் 331 மீட்டர்(1086 அடி) உயரம் கொண்டது. மொத்தம் 96 கேபிள்கள் பாரத்தை தாங்குகின்றன. இந்த பாலத்தில் மொததம் 8200 மெட்ரிக் டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவை முந்தியது
ஆர்ச் வகை ரயில் பாலங்களில் இதுவரை சீனாவின் நஜிஹி பாலம் 310 மீட்டர்(1017 அடி) உயரத்துடன் முதலிடத்தில் இருந்தது. செனாப் பாலம் அதைவிட 49 மீட்டர் (161 அடி) அதிக உயரமுள்ளது.

1997ல் உதம்பூர் -ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை திட்டப்பணிகள் துவங்கியபோது அதற்கான மதிப்பீடு ரூ.2500 கோடிதான். ஆனால், இன்றைக்கு 28 ஆண்டுகள் கழித்து திட்டம் முழுமை அடைந்துள்ளது. தற்போது, உதம்பூரில் இருந்து பாரமுல்லா வரையிலான திட்டத்துக்கு மட்டும் மொத்தம் ரூ.43780 கோடி செலவானதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. திட்ட மதிப்பீடான ரூ.2500 கோடியைவிட 17.5 மடங்கு அதிகம் செலவாகி உள்ளது.

266 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய காற்றையும் சமாளிக்கும் திறன் கொண்டது ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கிறது

8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வந்தாலும் சேதமடையாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் செனாப் பாலம்! உலகத்தின் உயரமான ரயில்வே பாலம்! ஆற்றுப்படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது . இது மிக உயரமானது என்று சொல்லப்படும் ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரம் அதிகம்.நமது குதுப் மினாரை விட 5 மடங்கு உயரம் அதிகம். இது வடக்கு காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரு முக்கியமான பாதையாகவும் விளங்குகிறது. பயணங்கள், ராணுவ இயக்கங்கள், மற்றும் பொருட்கள் போக்குவரத்து ஆகியவற்றுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi